‘மைனா’ படத்தின் மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த், தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அந்தப் படத்தைப் போன்ற வெற்றி அவருக்கு அடுத்து கிடைக்காமலே இருந்தது.
தற்போது ‘ஆள்’ படத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றியால் அவர் மகிழ்ச்சிக் கடலில் தவழ்ந்து கொண்டிருக்கிறார்.
விதார்த் நாயகனாக நடித்துள்ள ‘ஆள்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைத்து சென்டர்களிலும் அமோக வரவேற்புடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு ஊரிலிருந்தும் தியேட்டர் அதிபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விதார்த்தைப் பாராட்டியதோடு, ‘ஆள்’ படத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
”இந்த வெற்றியைத் தேடிக்கொடுத்த ரசிகர்களுக்கும் மீடியாக்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” – என்று உணர்ச்சிவசப்படும் விதார்த், தற்போது இன்னொரு வித்தியாசமான படத்தில் நடித்து வருகிறார்.
சக்கரவர்த்தி ஃபிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் நந்து தயாரிப்பில், ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கத்தில் கேகே இசையமைப்பில் உருவாகி உள்ள ‘காடு’ என்ற படத்தில் விதார்த் நாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகியாக கேரளாவைச் சேர்ந்த சமஸ்கிருதி என்ற புதுமுகம் நடிக்கிறார். தர்மபுரி மாவட்டம், அரூர் அருகில் உள்ள இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கத்தின் சொந்த ஊரான மலை கிராமம் ஒன்றில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற்றிருக்கிறது. அந்த மலைக்கிராமத்தில் உள்ள வீடுகளுடன் சில வீடுகளை செட் போட்டு ‘காடு’ படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள்.
காடு பற்றி விதார்த் என்ன சொல்கிறார்?
‘காடு’ படம் பற்றி விதார்த் கூறியதாவது, ”இந்தப் படம் என் வாழ்க்கையில் திருப்பு முனையைத் தரப்போகிற படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘மைனா’, தற்போது ‘ஆள்’ படங்களுக்கு ஆதரவு தந்த ரசிகர்கள், ‘காடு’ படத்துக்கும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்கிறார் விதார்த்.