சிவகார்த்திகேயன் என்றால் இன்றைக்கு சின்னக் குழந்தை கூட அவர் யார் என்று சொல்லி விடும். அந்த அளவிற்கு சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு பொன்ராம் – சிவகார்த்திகேயன் மீண்டும் இணையும் ‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், மேனகா யார் என்று இன்றைய இளைஞர்கள் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1980ம் ஆண்டு இளைஞர்களாக இருந்த அனைவருக்குமே தெரிந்திருக்கும் அல்லது தீவிரமான ரஜினிகாந்த் ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். 1980ல் வெளிவந்த ‘ராமாயி வயசுக்கு வந்துட்டா’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்தான் மேனகா.
அதன் பின் ரஜினிகாந்த் ஜோடியாக 1981ல் வெளிவந்த ‘நெற்றிக் கண்’ படத்தில் நடித்தார். அதன் பின் ஏனோ தமிழில் நடிக்காமல் மலையாளத் திரையுலகம் பக்கம் சென்று விட்டார். அங்கு எண்ணற்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த சில வருடங்களாக ஒரு சில மலையாளப் படங்களில் நடித்தார்.
மேனகா – சுரேஷ் தம்பதியரின் மகளான கீர்த்தி சுரேஷ் தற்போது சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதோடு விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஜோடியாகவும் நடிக்க உள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 2013ல் பிரியதர்ஷன் இயக்கிய ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அழகான தோற்றத்துடன் சிறந்த நடிகையாகவும் இருக்கும் கீர்த்தி சுரேஷைத் தேடி தற்போது பல தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதாம்.
மலையாளக் கரையோரம் இருந்து நமக்கு தண்ணீர் வருகிறதோ இல்லையோ…தங்கத் தாரகைகள் வந்து கொண்டிருக்கிறார்கள்…