கடந்த வாரம் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘தலக்கோணம்’ படத்தின் கதாநாயகன் ஜிதேஷ் . இதற்கு முன்பு ‘சிக்கி முக்கி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சிறு வயது முதலே நடிக்கும் ஆர்வம் கொண்டவர். ஏரோனேட்டிக்கல் இஞ்ஜினியரிங் முடித்திருந்தும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் நடன இயக்குனர் ஸ்ரீதரிடம் முறையாக நான்கு வருட காலம் நடனப் பயிற்சி பெற்றவர். பின்னர் சுட்டி டிவியில் குழந்தைகளுக்கு நடனம் சொல்லித்தரும் நடன இயக்குனராகவும், அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.
மேடை நாடகங்கள் மீதும் அதிக ஆர்வம் கொண்டதால் பல்வேறு நாடகங்களில் பங்கேற்று வந்தார். ஒரு முறை மேடை நாடகம் ஒன்றில் இவரின் நடிப்பைப் பார்த்த ‘சிக்கி முக்கி’ படத்தின் தயாரிப்பாளர் இவரை நாயகனாக அப்படத்தில் அறிமுகம் செய்தார்.
இது மட்டுமல்லாமல் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். கலைஞர் டிவியில் நாளைய இயக்குனரில் வெளி வந்த ‘சத்ய பிரமாணம்’ என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். ‘விழா’ படத்தை இயக்கிய பாரதி பாலகுமாரன் இயக்கிய குறும்படம் அது.
UK -விலும்இரண்டு 45 நிமிட குறும்படத்தில் நடித்துள்ளார். அதில் குறிப்பாக ஆங்கிலத்தில் மிகப் பெரிய நாவலான ஷெர்லாக் ஹோம்ஸ் நாவலின் ஒரு பகுதியை உரிமம் வாங்கி எடுக்கப்பட்ட குறும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஷெர்லாக் ஹோம்ஸ் நாவலின் வேறு சில பகுதிகள் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற பெயரிலேயே ஆங்கிலப் படமாக வந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதே போல் UK-வில் மிஸ்ஸிங் ச்சாப்டர் என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார்.
‘தலக்கோணம்’ படம் வெளியானதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜிதேஷ்.
“பெரிய இயக்குனர்கள் படங்கள்ல நடிக்கணும், சமந்தா மாதிரி முன்னணி ஹீரோயின்களோட நடிக்கணும். ‘ஏகன்’ படத்துல அஜித் சார் கூட ஒரு பாட்டுல நடனமாடியிருக்கேன். அதுக்கும் முன்னாடி ஆர்யா நடிச்ச ‘கலாபக் காதலன்’ படத்துலயும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கேன். தமிழ் சினிமாவுல ஒரு நல்ல இடத்துக்கு வரணும்னு ஆசைப்படறேன்,” என அவருடைய ஆசைகளைத் தெரிவித்தார்.
காலமும் நேரமும் கை கூடி வந்தால் ஜிதேஷின் ஆசைகள் நிறைவேறாதா என்ன….?