அறிமுகமான ‘கற்றது தமிழ்’ படத்திலேயே யார் இவர் என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை அஞ்சலி. தமிழில் தொடர்ச்சியாக “அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு” போன்ற வெற்றிப் படங்களிலும் சில நல்ல படங்களிலும் நடித்து திறமையான நடிகை என பெயரெடுத்தார்.
அவருடைய சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திடீரென தமிழ்த் திரையுலகை விட்டு விலகி தெலுங்குத் திரையுலகம் பக்கம் சென்று விட்டார். அங்கு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த ‘கீதாஞ்சலி’ திரைப்படம் தற்போது 50வது நாளைக் கடந்திருக்கிறது. சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அஞ்சலி அவருடைய திருமணம் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
“நான் இன்னும் திருமணத்திற்குத் தயாராகவில்லை. திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு எனக்கு இன்னும் வயசாகவில்லை, இன்னும் கொஞ்ச நாட்கள் அதற்காக காத்திருக்கலாம் என நினைக்கிறேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை, அதனால் திருமணத்தைப் பற்றி சிந்தித்துக் கூடப் பார்க்க நேரமில்லை,” என பதிலளித்திருக்கிறார்.
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்தப் படத்தின் பூஜை அன்று சென்னைக்கு வந்திருந்தார். அது நடந்து சில மாதங்கள் ஆகியும் அந்தப் படத்தைப் பற்றிய பேச்சையே காணோம். அந்தப் படத்திற்குப் பின் அஞ்சலி வேறு எந்த தமிழ்ப் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. வளர்த்து விட்ட தமிழ்த் திரையுலகை அவர் சுத்தமாக மறந்து போய்விட்டார். தெலுங்கிலும் வேறு எந்தப் புதுப் படத்திலும் அவர் ஒப்பந்தமாகவில்லை.
கல்யாணத்தைப் பற்றி அஞ்சலி பேசியிருப்பதால் விரைவிலேயே திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சரியமில்லை என்றே சொல்கிறார்கள்.