தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகிகளுள் ஒருவராக இருந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் குமரியானதும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். 90களில் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்தவர்.
விஜய்யுடன் ‘ஷாஜகான்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடித்தவர், “ஆனந்தப் பூங்காற்றே, வில்லன்” ஆகிய படங்களில் அஜித் ஜோடியாக நடித்தார்.
நேற்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் மீனாவும், நடன இயக்குனர் கலாவும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். அப்போது தன்னுடன் நடித்த நாயகர்களைப் பற்றியும், அவர்களிடம் பிடித்த விஷயங்களைப் பற்றியும் மீனா சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
“ரஜினிகாந்த் என்றால் எளிமையானவர், நட்பாகப் பழகக் கூடியவர், கமல்ஹாசன் என்றால் சீரியஸ், ஆனால் அவர் கிட்ட எதைப் பத்தி வேணாலும் கேக்கலாம். சினிமாவைப் பொறுத்தவரைக்கும் அவர் ஒரு என்சைக்ளோபீடியா. அவருக்குத் தெரியாதது ஒண்ணும் கிடையாது.
மோகன்லால் ஸார் சகல கலா வல்லவன். மம்முட்டி சாரும் சீரியஸான மனிதர். அவர் ஜாஸ்தி பேச மாட்டாரு. சிரஞ்சீவி சாரை சீரியஸ்னும் சொல்ல முடியாது, ஜாலியான கேரக்டர்னும் சொல்ல முடியாது. நாகார்ஜுனா சார்…ரொம்ப லேஸி…
அஜித் சாரை ஜாலியானவர்னும் சொல்ல முடியாது. சீரியசானவர்னும் சொல்ல முடியாது. அவர் ஒரு புரியாத புதிர், எப்படி எப்படி இருப்பாரு, எப்ப நல்லா பேசுவாரு, எப்ப மூடியா இருப்பார்னு சொல்ல முடியாது. அவரோட ‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக் ரொம்ப பிடிக்கும், செம கிளாஸ் அது, ” மனம் திறந்து சொன்னார் மீனா.
அதோடு அந்த நிகழ்ச்சியில் இருந்து மேலும் ஒரு தகவல் கிடைத்தது. விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகை மீனாதானாம். அதை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் என பக்கத்தில் அமர்ந்திருந்த நடன இயக்குனர் கலா சொன்னார்.
ஆனால், மீனாவுக்கு இப்போதும், அதாவது திருமணமாகி குழந்தை பிறந்த பின்னரும், பிடித்த ஒரே நடிகர் ஹிருத்திக் ரோஷன்தானாம். அவர் மீது இன்னும் கூட எனக்கு ‘க்ரஷ்’ உண்டு என குழந்தைத்தனமாக பேசினார் மீனா.