கமர்ஷியல் இயக்குனர் என்பது மகிழ்ச்சியே… – இயக்குனர் ஹரி

director hariஆக்ஷன் ஹீரோக்கள் என நடிகர்களை மட்டும் குறிப்பிட வேண்டுமா என்ன….ஆக்ஷன் இயக்குனர்கள் என ஒரு சிலரையும் தாராளமாகக் குறிப்பிடலாம். தொடர்ந்து ஆக்ஷன் படங்களையே இயக்கினாலும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவராக கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக இருந்து வருபவர் இயக்குனர் ஹரி. பிரசாந்த், சிம்ரன், வடிவேலு நடித்து 2002ம் ஆண்டு வெளிவந்த  ‘தமிழ்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹரி.

தொடர்ந்து “சாமி, ஐயா, ஆறு, தாமிரபரணி, சிங்கம், சிங்கம் 2” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.  திட்டமிட்டபடி படத்தை இயக்கி முடித்து தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்ற பெயரையும் பெற்றவர். தீபாவளியன்று இவரது இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷால், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள ‘பூஜை’ படம் வெளிவருவதை முன்னிட்டு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ஹரி பேசியதாவது,

“என்னை கமர்ஷியல் படம் எடுக்கும் இயக்குனர் என்றுதான் அனைவரும் குறிப்பிட்டு வருகிறார்கள். அதற்காக நான் கோபப்பட மாட்டேன், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதே சமயம், என்னை தயாரிப்பாளர்களின் இயக்குனர்கள் என குறிப்பிடுவதை பத்திரிகையாளர்கள் எனக்குக் கொடுத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.

ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் கமர்ஷியர் இயக்குனர்கள்தான். அவர்கள் படங்களை மிகவும் பிரம்மாண்டமாக இயக்குகிறார்கள். நான் எனக்குத் தெரிந்த விதத்தில் எடுக்கிறேன்.

ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை படம் வெளியான பின்புதான் சொல்ல முடியும். ஆனால், ஒரு படத்தின் இயக்குனர் அவர் இயக்கிய படத்தின் ரிசல்ட் என்ன என்பதை முதல் நாள், முதல் காட்சியிலேயே தெரிந்து கொள்ளலாம்.

‘பூஜை’ படத்தின் கதையைக் கூட முதலில் விஷாலிடம் சொல்லத் தயங்கினேன். அவரே தயாரித்து, நடிப்பது சாத்தியப்படுமா என யோசித்தேன். ஆனால், ஒரு தயாரிப்பாளராக அவருடைய கடமையைப் பற்றி நான் பத்திரிகைகள் மூலம், தெரிந்து கொண்டதையடுத்து அந்த தயக்கத்தை விட்டுவிட்டேன்.

படம் இயக்க வரும் ஒவ்வொரு புதிய தயாரிப்பாளரும் விஷாலை பின்பற்ற வேண்டும். தினமும் படப்பிடிப்பு முடிந்ததும், அன்றைய செலவை அன்றே கணக்கிட்டு விடுவார். ஒரு தயாரிப்பாளராக அவருடைய அணுகுமுறை அற்புதமானது.

இன்றைக்கு தமிழ் சினிமாவில் பல புது இயக்குனர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். படப்பிடிப்புக்கு போவதற்கு முன் கதை விவாதத்தை நன்றாக செய்யுங்கள். அதற்கு அதிக நாட்களை வைத்துக் கொண்டு படப்பிடிப்பை திட்டமிட்ட நாட்களுக்குள் முடியுங்கள்.

அடுத்ததாக சூர்யாவை வைத்து மீண்டும் படம் இயக்க உள்ளேன். அஜித், விஜய் ஆகியோருடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று எனக்கும் ஆசைதான். கதைகளும், எங்களது தேதிகளும் சரியாக அமைந்தால் கண்டிப்பாக அவர்களை வைத்தும் படம் இயக்குவேன்.

ஒரு சண்டைக் காட்சியை நீக்கியிருந்தால் ‘பூஜை’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கும். இருந்தாலும் படத்தை அப்படியே ரிலீஸ் செய்யுங்கள், படம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று விஷால் சொன்னார். இந்த படத்தை எல்லோரும் குடும்பத்துடன் பார்க்கும்படியாகத்தான் எடுத்திருக்கிறோம்,” என்றார் இயக்குனர் ஹரி.

 

Read Previous

‘கங்காரு’ என் பெயரை மாற்றும் – இயக்குனர் சாமி

Read Next

‘களம்’ – கதைக் களத்தின் கதை…