சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிக்க ‘எதிர் நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வரும் படம் ‘காக்கிச் சட்டை’. இந்தப் படத்திற்கு முதலில் வைத்த பெயல் ‘டாணா’. அந்தக் காலத்தில் போலீசாரை அழைக்க ‘டாணா’ என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டது.
அந்தப் பெயரில் ஏதோ பழைய வாசனை அடிப்பது போலிருந்ததால், படத்திற்கு ஏதாவது புதுப் பெயரை தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், எந்தப் பெயரும் சரியாக சிக்காததால் கதைக்குப் பொருத்தமாக கமல்ஹாசன் நடித்த ‘காக்கிச் சட்டை’ படத்தின் டைட்டிலையே திரும்பப் பயன்படுத்தலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.
அந்தப் படத்தின் தலைப்பு சத்யா மூவீஸ் நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்ட ஒரு டைட்டில். அதனால், முறைப்படி அதற்கான அனுமதியை வாங்கினால்தான் பின்னர் ஏதாவது பிரச்சனை ஏற்படாமல் இருக்கும். இதற்காக அவர்களை அணுகிய போது, தலைப்புக்காக ஒரு பெரும் தொகை பேசப்பட்டதாம்.
கடைசியில் அவர்கள் சொன்ன விலையிலிருந்து பாதித் தொகையைக் கொடுத்து ஒரு வழியாக தலைப்பை அனுமதியுடன் வாங்கியிருக்கிறார்களாம்.
இந்தக் காலத்தில் படத்தை எடுத்துக் கூட முடித்து விடலாம், தலைப்பு வைப்பதுதான் ‘தலை’ போகிற பிரச்சனையாக இருக்கிறது என்பது ‘அறிந்தவர்களுக்கு’த் தெரியும்…