1 பந்து 4 ரன் 1 விக்கெட் – விமர்சனம்

1 Pandhu 4 Run 1 Wicket Review 2014ம் ஆண்டை பேய்ப் படங்களின் ஆண்டு என்று தாராளமாகச் சொல்லலாம். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் பேய்க் கதைகளைக் கொண்ட படங்கள்தான் அதிகம். அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் முதல் அறிமுக இயக்குனர்கள் வரை அனைவரையும் இந்தப் ‘பேய்’ பிடித்து ஆட்டுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். தனது இரண்டாவது படமாக இந்தப் படத்தை இயக்கியுள்ள வீரா, எப்படியும் பேய் தன்னைக் காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். பேய்க் கதை என்றாலே பயமுறுத்தத்தான் செய்வார்கள். ஆனால், இவரோ கொஞ்சம் பயமுறுத்தல், நிறைய சிரிப்பு என பேய்க் கதையைக் கூட பிரித்துப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். கல்லூரி படிக்கும் காலத்திலேயே வினய் கிருஷ்ணா, ஹாசிகா தத் இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால், ஹாசிகாவை அவருடைய பெற்றோர் முறை மாப்பிள்ளை சென்ட்ராயனுக்குத் திருமணம் நிச்சயிக்கிறார்கள். காதலர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடி வந்து சென்னையில் வினய் கிருஷ்ணாவின் நண்பனான ஜீவா தங்கியிருக்கும் ஒரு மிகப் பெரிய பங்களாவில் அடைக்கலம் ஆகிறார்கள். ஆனால், அந்த பங்களாவில் இருக்கும் ஒரு பேய் ஹாசிகா தத்துக்குள் புகுந்து கொண்டு அனைவரையும் பயமுறுத்துகிறது. திடீர் திடீரெனத்தான் ஹாசிகாவை பேய் பிடித்து ஆட்டுகிறது. ஹாசிகாவைத் தேடி மாப்பிள்ளை சென்ட்ராயனும் அந்த பங்களாவுக்குள் வந்து விடுகிறார். எப்படியாவது ஹாசிகாவிற்குள் புகுந்துள்ள பேயை விரட்ட அவருடைய காதலன் வினய் கிருஷ்ணா முயற்சிக்கிறார் அவருடைய முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை. படத்தில் நாயகனை விட நாயகிக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். ஹாசிகா தத் அழகான காதலியாகவும், அதிர வைக்கும் பேயாகவும் வந்து ரசிக்கவும் வைக்கிறார், மிரளவும் வைக்கிறார். பேயாக ஒரு பக்கம் மிரள வைக்கிறார் என்றால் மறுபக்கம் கவர்ச்சியாகவும் நடித்து மிரள வைக்கிறார். பெண் என்றால் பேயும் இறங்கும் என்று சொல்வார்கள், ஆனால், இங்கு பெண்ணுக்குள்தான் பேய் இறங்கியிருக்கிறது. தனக்குள் இறங்கியுள்ள பேயை மிரட்டலான நடிப்பின் மூலம் ஏற்றி வைக்கிறார் ஹாசிகா தத். படத்தில் பெயருக்குத்தான் வினய் கிருஷ்ணா நாயகன், டூயட் பாடுவதால் மட்டுமே அவரை நாயகன் என ஒத்துக் கொள்ளலாம். ஜீவா, முனீஸ் ராஜா, சென்ட்ராயன் பேய்க்குப் பயந்து நம்மை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். ஸ்ரீமன் – மதுமிதா இடையிலான டி.வி. சீரியல் காமெடியில் நகைச்சுவை அதிகம். உமேஷ் இசையில் சில பாடல்கள் இனிமையாக அமைந்திருக்கின்றன, பின்ன இசையில் நன்றகாவே பயமுறுத்தியிருக்கிறார். ‘சிக்சர்’ அடிக்கவில்லை என்றாலும் ‘அவுட்’ ஆகாமல் தப்பித்திருக்கிறார்கள்.

Read Previous

‘லிங்கா’ – மூன்று ஆச்சரியங்கள்…ரஜினிகாந்த் பேச்சு…

Read Next

‘கத்தி’ – 2014ல் இந்திய ஆல்பங்களில் முதலிடம்…