சின்னத் திரை நடிகராகவும், தொகுப்பாளராகவும் முத்திரை பதித்த தீபக் மீண்டும் வெள்ளித் திரையில் ‘இவனுக்கு தண்ணில கண்டம் ‘ படத்தின் மூலம் தனது முத்திரையை பதிக்க வருகிறார்.
படம் பற்றி தீபக் கூறியதாவது,
‘பல தலைப்புகளை ஆலோசித்த பிறகே இந்த தலைப்பை தேர்வு செய்தோம். அது இந்த அளவுக்கு பிரபலமாகும் என்பதை நாங்கள் நினைக்கவே இல்லை. இந்த படம் உலக வெப்பமயம் ஆவதையோ , தண்ணீர் பிரச்சனை பற்றியோ பேசவில்லை. இது குடியின் தீமைகளை பற்றி விவாதிக்கும் பிரசார படமும் அல்ல. நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் ஒரு பார்ட்டி, அதன் பின்னால் இருக்கும் மது கேளிக்கைகள், அதனால் வரும் விளைவுகள் ஆகியவற்றை மிகவும் ஜனரஞ்சகமாக நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் சக்தி வேல்.
இந்த நகைச்சுவை ஒரு போதை போல, மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும். நடிப்பு என்று வந்த பிறகு பெரிய வேடமோ, சின்ன வேடமோ, சின்ன திரையோ , பெரிய திரையோ நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இந்த படத்தில் கூட நான் ஒரு சின்னத் திரை தொகுப்பாளனாகத்தான் நடிக்கிறேன். அந்த பாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பதால் மட்டுமே நாயகனாகத் தேர்வு செய்ய பட்டு உள்ளேன்.
சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் நடிகர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்க முக்கியக் காரணம் நாங்கள் அவர்கள் வீட்டு பிள்ளையாக கருதப்படுவதுதான். இந்த வரவேற்பு படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும்,” என நம்பிக்கையுடன் கூறுகிறார் தீபக்.