விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 4’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் 20ம் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ளது.
இறுதிப் போட்டியில் ஸ்பூர்த்தி, ஹரிப்பிரியா, ஜெஸ்ஸிகா, ஸ்ரீஷா, அனுஷ்யா, பரத் ஆகிய ஐவரும் போட்டியிட உள்ளார்கள். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வாக உள்ளார்.
2006ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் நிகில் மாத்யூ, தொடர்ந்து அஜிஷ், சாய் சரண், திவாகர் ஆகியோர் சீனியர் போட்டிகளிலும், 2007ம் ஆண்டில் ஜுனியர் போட்டியில் கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து அல்கா, ஆஜித் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் இறுதிப் போட்டியில் முதலிடம் பெற்று வெற்றி பெறுபவரு ஒரு அடுக்குமாடி குடியிருப்பும், முதல் ரன்னருக்கு 1 கிலோ தங்கமும், இரண்டாம் ரன்னருக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
சென்னையில், பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தங்கவேலு இஞ்சினியரிங் கல்லூரியில் 20ம் தேதி, வெள்ளிக் கிழமை, மாலை 6 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் உள்ளிட்ட தமிழ்த் திரைப்பட இசைக் கலைஞர்களுடன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்களான மனோ, சித்ரா, மால்குடி சுபா ஆகியோர் நடுவர்களாக இருந்து ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 4’ நிகழ்ச்சியின் வின்னர் யார் என்பதை தேர்வு செய்ய உள்ளார்கள்.
15,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்ள உள்ள இந்த இறுதிச் சுற்று நிகழ்ச்சியில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது.