‘100வது நாள்’ – தமிழ் சினிமாவுக்கு வரும் ‘ரீ பூட்’ முறை…

nooravathu naal title cardமணிவண்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் 1984ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ‘நூறாவது நாள்’.

பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படம் 80களில் அதிகம் பேசப்பட்ட ஒரு படமாக இருந்தது. சத்யராஜின் வில்லத்தனமான நடிப்பு அவருடைய திரையுலக வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அந்தப் படத்தை மீண்டும் ‘ரீபூட்’ முறையில் மணிவண்ணனின் மகனாக ரகு மணிவண்ணன் இயக்க உள்ளார்.

வெற்றி பெற்ற ஒரு பிரபலமான படத்தை மீண்டும் எடுக்கும் போது ‘ரீமேக் ‘செய்வார்கள். அதாவது அதே கதையை வேறு நடிகர்கள் கொண்டு மாற்றங்களுடன் மீண்டும் எடுக்கப் படுவது ரீமேக். சீக்வெல் எனப்படுவது அதே கதையின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது.

அப்படத்தின் மையக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு கதைப் போக்கு, திரைக்கதை, காட்சிகள், நடிகர்கள், பாத்திரங்கள் எல்லாவற்றையும் காலத்துக்கேற்ப மாற்றி உருவாக்குவதுதான் ‘ரீ பூட்’ முறையாகும்.

ஹாலிவுட்டில் ‘ஹல்க்’, ‘சூப்பர்மேன்’, பேட்மேன்’ ,’ஸ்பைடர் மேன்’ ‘டெர்மினேட்டர்’ போன்ற பல படங்கள் ரீபூட் முறையில் உருவாகி வெற்றிபெற்றுள்ளன, இன்றும் அப்படிப்பட்ட படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழில் அப்படி உருவாகும் முதல் படம்தான் ‘நூறாவது நாள்’ .

படத்தை இயக்க உள்ள ரகு மணிவண்ணன் இந்த ‘ரீபூட்’ படம் பற்றி கூறியதாவது, “அப்பா இயக்கிய படங்களில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘நூறாவது நாள்’. பரபரப்பாகப் பேசப்பட்ட படமும் கூட. இதை ரீ பூட் முறையில் எடுக்க முன்பே முயன்றேன். அப்பா, அம்மாவின் திடீர் மறைவு என்னை மிகவும் பாதித்தது. எனவே ஒரு வருடம் இங்கிலாந்தில் தங்கியிருந்தேன். மனம் அமைதியடைந்தது. அங்கு சிலரைச் சந்தித்தேன், நண்பர்களுடன் பேசினேன். பலரும் என் முயற்சிக்கு ஊக்கம் தந்தார்கள். ஆக்ஷன் படத்தை ரீமேக் செய்பலாம் , ஆனால் த்ரில்லரை அப்படி எடுக்க முடியாது.

இங்கே வந்த பிறகு அதைப் பற்றி பல விவாதங்கள் போனது. அதே கதையை வைத்து ஒரு படத்தை மறுபடியும் அப்படியே எடுப்பதில் எந்த சுவாரசியமும் இல்லை. அந்தக் கதை எல்லாருக்கும் தெரிந்து விட்டதால் எதிர்பார்ப்பு இருக்காது. தெரிந்த விஷயமாக இருப்பதில் என்ன த்ரில் இருக்கப் போகிறது ? எனவேதான் இப்படி எடுக்க முடிவு செய்தேன். கதை, காட்சிகள், திரைக்கதை எல்லாவற்றையும் முழுக்க முழுக்க மாற்றி வேறு ஒரு திசையில் விறுவிறுப்புடன் செல்லும்படி உருவாக்கியிருக்கிறோம்.

நாயகனாக ‘சதுரங்கவேட்டை’ நட்ராஜ் நடிக்கிறார்.திரைக்கதை வேலைகள் முடிந்து விட்டாலும், திரைக்கதையை செதுக்குவது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதில் திருப்தி வரும் வரை படப்பிடிப்புக்குச் செல்ல மாட்டோம்.

என்னுடன் இதில் சிபிராஜ், யு.கே.செந்தில்குமார் உதவியிருக்கிறார்கள், பெரிதும் துணையாக இருந்தார்கள்,” என்கிறார் ரகு மணிவண்ணன்.

‘நூறாவது நாள்’ புது வடிவத்துக்கு இசை நிரோ பிரபா, இவர் லண்டனில் இருக்கும் இவர் ஏ.ஆர்.ரகுமானின் மாணவர். ஒளிப்பதிவு – யுகே செந்தில்குமார். தயாரிப்பு – ஏடி எம். புரொடக்ஷன்ஸ், கதை – மணிவண்ணன், திரைக்கதை வசனம் இயக்கம் – ரகுமணிவண்ணன்.

படத்தில் நடிக்கப் போகும் மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

‘சதுரங்கவேட்டை’ நாயகனும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் இப்போது விஜய் நடிக்கும் ‘புலி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். மார்ச்சில் அந்தப் படத்தின் பணியை முடித்து விடுவார். எனவே ‘நூறாவது நாள்’ படப்பிடிப்பு ஏப்ரலில் ஆரம்பமாக இருக்கிறது.

தமிழில் இதுவரை செய்யப்படாத புதிய முயற்சியாக ஒரு ‘ரீ பூட்’ படம் உருவாக உள்ளது.

Read Previous

கவுண்டமணி சாரை மிஞ்ச ஆளே இல்லை – பாண்டியராஜன் மகன் பிரித்வி

Read Next

விஜய் டிவி – சூப்பர் சிங்கர் ஜுனியர் 4 – இறுதிப் போட்டி