ஜெயிலர் 2 – டிரைலர்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், எஸ்ஜேசூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனாக அதிரடி காட்டிய ரஜினிகாந்த், இந்த பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். ஆனால், இம்முறை மிகப்பெரிய கடத்தல் பின்னணியைக் கொண்ட ஆபத்தான வலையமைப்பை எதிர்கொள்ளும் சூழல் அவருக்கு உருவாகிறது.

முத்துவேல் பாண்டியன் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு டிரைவராக வாழ்ந்து வருவதும், அவரைத் தேடி எதிரிகள் வருவதும் டிரைலரில் இடம் பெற்றுள்ளன. ஒருபுறம் எளிமையான தோற்றத்தில் ரஜினிகாந்த் தோன்றினாலும், மறுபுறம் அவரது ‘டைகர்’ அவதாரம் மீண்டும் வெளிப்படும் காட்சிகள் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

எஸ்ஜே சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட புதிய கதாபாத்திரங்கள் முத்துவேல் பாண்டியனுக்கு எதிராக களமிறங்க, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட முதல் பாகத்துடன் தொடர்புடைய கதாபாத்திரங்களும் டிரைலரில் இடம் பெற்றுள்ளனர். ஆக்‌ஷன், நகைச்சுவை, ரஜினியின் ஸ்டைல் என முதல் பாகத்தின் அம்சங்களை இன்னும் பிரம்மாண்டமான அளவில் தொடரும் படமாக ‘ஜெயிலர் 2’ உருவாகியிருப்பது டிரைலர் மூலம் தெரிகிறது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’, முத்துவேல் பாண்டியனின் அடுத்த அதிரடியை அக்டோபர் 15-ம் தேதி தெரிந்து கொள்ளலாம்.

Read Previous

‘சிக்மா’ அறிமுகப்படுத்திய பரியா அப்துல்லா

Read Next

பத்தா – வெற்றிச் சந்திப்பு