புதுமுகங்கள் நடித்து வெளிவந்திருக்கம் ஒரு தாதாவைப் பற்றிய கதை கொண்ட படம். தாதா கதை என்றாலே ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தால், அந்த தாதாவை மொக்கை தாதாவாக்கி ஒரு காமெடி படமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
ராஜன் தேஜேஸ்வர் ஏரியா தாதாவான சமக் சந்திராவை ஒரு நாள் அடிஅடியென அடித்துத் துவைக்கிறார். இதனால், தாதாவான சமக் சந்திரா அவர் கெத்தாக வைத்திருந்தத மார்க்கெட் பகுதியை இழக்கிறார். பதிலுக்கு ராஜனை அடித்துத் துவைத்தால்தான் மார்க்கெட் அவருக்குக் கிடைக்கும் என்ற நிலையில், ராஜன் அவரிடம் சிக்காமலேயே இருக்கிறார். கடைசியில் ராஜனை அவர் பழி தீர்த்துக் கொண்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
அறிமுக நாயகன் ராஜன், அவருடைய கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாகவே இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். ஆனால், பேசும் போதுதான் தெலுங்கு வாடை அடிக்கிறது.
நாயகியாக தருஷி, டாக்டருக்குப் படிப்பவருக்கு, சாதாரண ராஜன் மீது காதல், வழக்கமான தமிழ் சினிமா காதல். வில்லனாக சமக் சந்திரா. அவருக்கு டப்பிங் கொடுத்தவரே குரலில் வில்லத்தனத்தை ஏற்றிவிடுகிறார். அவர் மனைவியாக வினோதினி, தாதாவையே புரட்டி எடுக்கும் மனைவியாக நடித்திருக்கிறார். நாயகனின் அம்மாவாக வழக்கம் போல ஓவர் ஆக்டிங்கில் ரேணுகா.
படத்தில் பாடல்கள் பரவாயில்லை ரகத்தில் கூட இல்லை. வட சென்னை அது சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளரும், கலை இயக்குனரும் யதார்த்தத்தை பிரதிபலித்திருக்கிறார்கள்.
தாதா கதைகளில் கூட நகைச்சுவையைச் சேர்த்துக் கொடுக்க முடியுமா என ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ரவி அப்புலு. இந்த மாதிரியான சிறிய பட்ஜெட் படங்களும் ஓடினால்தான் தமிழ் சினிமா வாழும்.
இரண்டரை மணி நேரம் ஜாலியாகப் போக வேண்டும் என நினைப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.