ஒரு மெல்லிய கோடு - விமர்சனம்
29 Jun 2016
தமிழ்த் திரையுலகில் பேய்ப் படங்களாக வந்து கொண்டிருக்கம் சூழ்நிலையில், இந்தப் படத்திலும் பேய் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, ஒரு ‘மர்டர் மிஸ்ட்ரி’யை மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். அவர் இதற்கு முன் இயக்கிய “குப்பி, வனயுத்தம்” ஆகிய இரண்டு படங்களுமே விமர்சகர்களால் பெரிதும பாராட்டப்பட்ட படங்கள். அந்தப் படங்களை நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்துக் கொடுத்து பேசப்பட்டார். அதே போல இந்தப் படமும் நிஜ சம்பவம் ஒன்றின் கதையா இருக்குமோ என்று பட வெளியீட்டிற்கு முன் பத்திரிகைகளில் பரபரப்பாகப் பேசினார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய படங்களின் மூலம் மீடியாக்களிடமும், ரசிகர்களிடமும் பெயரெடுத்தவர் இயக்குனர் ரமேஷ். இந்த ‘ஒரு மெல்லிய கோடு’ படத்திலும் அவருடைய திரைக்கதைதான் படத்தின் ஹைலைட். ஒரே ஒரு இரவில் நடக்கும் கதைதான் இந்தப் படம். பிரபல பெண் தொழிலதிபரான மனிஷா கொய்ராலா கொலை செய்யப்பட, அவருடைய உடல் ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்தவதற்காக பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், திடீரென அவருடைய உடல் காணாமல் போய்விடுகிறது. மனிஷாவின் கணவரான ஷாம் மீது சந்தேகம் கொண்டு போலீஸ் அதிகாரியான அர்ஜுன் அவரை தன்னுடைய விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார். காணாமல் போன மனிஷாவின் உடலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார். அதன் பின் என்ன நடந்து என்பதுதான் படத்தின் பரபரபப்பான திரைக்கதை. படத்தின் முடிவு ரசிகர்கள் யாருமே யூகிக்க முடியாத ஒரு முடிவு. அறிமுகமான காலத்திலிருந்தே போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றால் அர்ஜுனுக்கு அல்வா சாப்பிடுவது போல. இந்தப் படத்திலும் அந்தக் கதாபாத்தில் சர்வசாதாரணமாக நடித்திருக்கிறார். ஷாமை விசாரிக்கும் காட்சிகள் அனைத்திலும் கம்பீரமான போலீஸ் அதிகாரி கண் முன் நிற்கிறார். ஆக்ஷனில் அதிரடியான போலீஸ் அதிகாரியாக பார்த்த அர்ஜுன் இந்தப் படத்தில் அமைதியான போலீஸ் அதிகாரியாக நடிப்பில் அதிரடி காட்டியிருக்கிறார். தன்னை விட மூத்த வயதுடைய மனிஷா கொய்ராலாவைத் திருமணம் செய்து கொண்டாலும் இன்னொரு பக்கம் அக்ஷா பட்டை காதலித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் ஆரம்பம் முதலே ஷாமை வில்லனைப் போலவே தெரிகிறார். எந்த விதமான கதாபாத்திரத்திலும் தன்னால் நடிக்க முடியும் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஷாம். மனிஷா கொய்ராலா சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்துள்ள படம். முகத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. ஷாமை விட வயது மூத்தவராக படத்தின் கதைப்படி இருந்தாலும், பல காட்சிகளில் ஷாமின் அம்மா போலக் கூடத் தெரிகிறார். ஷாமின் காதலியாக அறிமுகமாகியிருக்கும் அக்ஷா பட் தமிழுக்கு வந்துள்ள அழகான அறிமுகம். அர்ஜுனின் வலது கரமாக படத்தின் இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷும் விசாரணை அதிகாரியாக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இளையராஜாவின் இசை வழக்கம் போலவே பின்னணி இசையில் படத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது. பாடல்களை ஏற்கெனவே கேட்ட மாதிரி இருக்கிறது. அதிகமான காட்சிகள் மருத்துவமனை வளாகத்தில் இருந்தாலும் அது தெரியாத அளவிற்கு ஒளிப்பதிவாளர் கிருஷ்ணஸ்ரீராமும், படத் தொகுப்பாளர் கிருஷ்ண ரெட்டியும் இயக்குனருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். மருத்துவமனையை ‘செட்’ என்று சொன்னால் நம்பவே முடியாது. ‘ஒரு மெல்லிய கோடு’ - ஒரு முறை பார்க்கலாம். Cast and Crew Cast Arjun, Shaam, Manisha Koirala, Aksha Butt, AMR Ramesh and others Direction - AMR Ramesh Music - Ilaiyaraja Cinematography - Krishna Sriram Editing - K.V. Krishna Reddy PRO - Mounam Ravi Production - Akshaya Creations Release On - 1st July 2016