மெட்ரோ - விமர்சனம்
26 Jun 2016
நமது வாழ்க்கையில் சொல்ல வேண்டிய பல விஷயங்கள், மக்கள் தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.
ஆனால், அவற்றையெல்லாம் விடுத்து, இப்படி ஒரு படம் எடுத்தால் நாமும் பேசப்படுவோம் என்ற காரணத்திற்காகவே இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் போலிருக்கிறது.
‘செயின் திருட்டு’ இதுதான் படத்தின் மையம். அதன் இருட்டு பக்கங்களுக்குத்தான் இயக்குனர் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதிலும் அப்படி ஒரு டீடெயில் விளக்கம்.
‘செயின் திருட்டு’ தொழிலை நமக்கும் சேர்த்து கற்றுக் கொடுக்கும் அளவிற்கு காட்சிக்குக் காட்சி பாடம் நடத்துகிறார். மக்கள், குறிப்பாக பெண்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் படத்தில் காட்சிகள் இல்லை. மாறாக, திருடனாக ஆக ஆசைப்படும் ஒருவனுக்கு எப்படியெல்லாம் செயினை பாதுகாப்பாக (?) திருட வேண்டும் என்றுதான் சொல்லிக் கொடுக்கிறார்.
ஓய்வு பெற்ற போலீஸ்காரரான ராஜாவுக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் சிரிஷ், இளையவன் சத்யா. கல்லூரியில் படிக்கும் சத்யா ஆடம்பரமாக வாழ ஆசைப்படுகிறார். ஆனால், அவருக்கு வீட்டிலிருந்து கிடைப்பது கண்டிப்பு மட்டுமே. அதனால், வேறு வழியில்லாமல் திருட்டைத் தொழிலாக வைத்திருக்கும் நண்பனுடன் சேர்ந்து திருட ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் அதுவே அவருடைய தொழிலாக மாறுகிறது. வீட்டுக்கு அது தெரிய வரும் நேரத்தில் பெற்ற அம்மாவையே கொலை செய்கிறார். அம்மாவைக் கொன்றவனைக் கண்டுபிடிக்க களம் இறங்குகிறார் மூத்த மகன் சிரிஷ். இதன் பின்ன என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.
படத்தின் நாயகனாக இருப்பது தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யா. ஆனால், அவரோ அவருடைய அப்பா ராஜாவுக்கே தம்பி போல இருக்கிறார். இருந்தாலும் அப்பாவித்தனமான அந்த முகம் அவருடைய கதாபாத்திரத்தைக் காப்பாற்றி விடுகிறது.
சிரிஷுக்கு இது முதல் படம். படத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் மட்டுமே ஹீரோவாகத் தெரிகிறார். நடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கிடைக்கும் காட்சிகளில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனாலும், படம் முடிந்து வந்தாலும் சத்யாவின் காட்சிகள்தான் மனதில் நிற்கின்றன.
படத்தின் நாயகி மாயாவை விட அப்பாவாக நடித்திருக்கும் ராஜாவுக்கும், அம்மாவாக நடித்திருக்கும் துளசிக்கும் காட்சிகள் அதிகம்.
வில்லனாக பாபி சிம்ஹா. படம் முழுவதும் அவர் புகை பிடித்துக் கொண்டேயிருப்பதால் புகை மூட்டத்தில் அவர் நடிப்பே தெரியவில்லை. எப்போதோ இந்தப் படத்தில் நடித்திருப்பார் போலிருக்கிறது.
அப்பாவிடம் பாதி சிகரெட் வாங்கி அடிக்கும் மூத்த மகன், பணத்திற்காக அம்மாவையே கொலை செய்யும் இளைய மகன், இஞ்சினியரிங் (?) படித்தாலும் திருட்டைத் தொழிலாக வைத்திருக்கும் நண்பன், குழந்தை செயினைக் கூடப் பறிக்கும் திருட்டுக் கூட்டம், காதலனிடமிருந்து பொருட்களாக கேட்டுத் துடிக்கும் காதலி என அதிர்ச்சியடைய வைக்கும் பல காட்சிகள்.
எதற்கு இந்தப் படத்திற்கு ஒரு ‘ஏ’ மட்டும் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. தாராளமாக மூன்று, நான்கு ‘ஏ’ கொடுத்திருக்கலாம்.
தயவு செய்து உங்கள் குடும்பத்துடனோ, கல்லூரியில் படிக்கும் உங்களது மகன், மகளுடனோ இந்தப் படத்தைப் பார்க்கப் போய் விடாதீர்கள்.
இருப்பதைத் தானே எடுத்திருக்கிறோம் என்று படக் குழுவினர் சொன்னால் அவர்களுக்கு கடந்த ஆண்டில் சினிமாவை தலை நிமிர வைத்த சமீபத்திய ‘‘காக்கா முட்டை, விசாரணை, குற்றம் கடிதல், கிருமி, தனி ஒருவன்” போன்ற படங்களைத் தொடர்ந்து பார்க்கச் சொல்ல வேண்டும்.
நாம் கொடுக்கும் படைப்புகளில் இருந்துதான் நம்மைப் பற்றியும் பேசுவார்கள் என்பது இயக்குனருக்குத் தெரிந்திருக்குமா....?
Cast And Crew
Actors - Shirish, Maya, Bobby Simha, Sendrayan, Satya, Yogi Babu, Tulasi, Nishanth and others.
Direction - Ananda Krishnan
Music - Johan
Lyrics - Gana Bala, Thanikodi
Cinematography - N.S. Uthayakumar
Editing - Ramesh Bharathi
Art - S.S. Moorthy
Stunt - Mahesh
Production - E 5 Entertainments & Metro Productions
Tags: metro