ஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம்

மும்பையைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனமான ஈராஸ் இப்படி மண் மனம் சார்ந்த ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்ததற்கு முதலில் பாராட்டுக்கள்.

சினிமா என்றாலே ஒரு கதை இருக்க வேண்டும், திரைக்கதை இருக்க வேண்டும், கைதட்ட வைக்கும் வசனங்கள் இருக்க வேண்டும் என்று ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், இந்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ வழக்கமான சினிமாவிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக அமைந்திருக்கிறது.

தன்னுடைய முதல் படத்தையே முத்திரை பதிக்கும் படமாகக் கொடுத்த இயக்குனர் சுரேஷ் சங்கையா, தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு இயக்குனர்.

35 வயதான விதார்த்துக்கு, ரவீணாவுடன் திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்ததால் அவர்களது குல தெய்வக் கோவிலுக்கு ஒரு கிடாயை பலி கொடுக்க அவருடைய பாட்டி வேண்டியிருக்கிறது. அதனால், உறவினர்கள் சூழ லாரியில் அவர்களது குல தெய்வக் கோவிலுக்கு கிளம்புகிறார்கள். போகும் வழியில் லாரியை ஓட்டிய விதார்த்தால் ஒரு விபத்து நேருகிறது. அந்த விபத்தில் ஒருவர் இறந்து போகிறார். அதிலிருந்து தப்பிக்க விதார்த்த என்ன செய்கிறார் என்பதுதான் ‘ஒரு கிடாயின் கருணை மனு’.

‘மைனா, குற்றமே தண்டனை’ படங்களுக்குப் பிறகு விதார்த் நடித்துள்ள அற்புதமான படம் இது. கிராமத்து இளைஞர் ராமமூர்த்தியாக அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார். இந்தப் படமும் விதார்த்தின் முக்கிய படங்களின் பட்டியலில் இடம் பெறும்.

பிரபல பின்னணிக் குரல் கலைஞரான ரவீணா நாயகியாக அறிமுகமாகியுள்ள படம். வழக்கமான கிராமத்துப் பெண்கள் எப்படியிருப்பார்களோ அப்படியே இருக்கிறார். தன் கணவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என அவர் பதைபதைக்கும் காட்சிகளில் அவ்வளவு யதார்த்தம்.

விதார்த்தின் பாட்டி, மாமனார், அந்த ‘அரும்பாடுபட்டு’ ஹலோ கந்தசாமி, லாரி டிரைவர் வீர சமர், லாரி ஓனர் என சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கூட அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.

ரகுராம் பின்னணி இசையும், ஆர்.வி. சரண் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தைக் கொடுத்திருக்கின்றன.

படம் பார்க்கும் போது ஒரு படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வை விட ஒரு நாவலைப் படிக்கிறோம் என்ற உணர்வே ஏற்படும்.

ஒரு கிடாயின் கருணை மனு, இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களில் சிறந்த படம்.

Read Previous

Glimpse Of SPYDER Teaser

Read Next

‘ஸ்பைடர்’ டீசர் புதிய சாதனை

Most Popular