ஓய் – விமர்சனம்

சிறிய பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தால்தான் தொடர்ந்து அப்படி வெளிவரும் படங்களால் திரையுலகமும் நன்றாக இருக்கும். பெரிய நட்சத்திரங்களின் படங்கள், பெரிய இயக்குனர்களின் படங்களை ரசிக்கும் அதே நேரத்தில் ரசிகர்களும் இப்படி அறிமுக இயக்குனர்களின் படங்கள், அறிமுக நடிகர்களின் படங்கள், வளரும் நடிகர்களின் படங்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். கிராமத்துப் பின்னணியில் ஒரு ஜாலியான கதையை இந்த ‘ஓய்’ படத்தின் மூலம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரான்சிஸ் மார்க்கஸ். கொலைக் கைதியாக இருக்கும் ஈஷா அக்கா திருமணத்திற்காக பரோலில் செல்கிறார். அப்போது பேருந்து நிலையத்தில் கதாநாயகன் கீதனின் தங்கச் சங்கிலியை ஒருவர் திருடுவதைப் பார்த்து அவரைத் துரத்திக் கொண்டு போகிறார். சங்கிலியை மீட்டு வருவதற்குள் கீதன் அமர்ந்திருந்த பேருந்து கிளம்பி விடுகிறது. கீதன் முதலில் சொன்னதை வைத்து அவருடைய ஊருக்குச் செல்கிறார். அங்கு ஈஷாதான் கீதனின் காதலி என நினைத்து கீதன் குடும்பத்தில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. சென்னை சென்ற கீதன் ஊருக்குத் திரும்ப, அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. கலகலப்பான கதாபாத்திரம் என்பதால் கீதன் அதை நிறைவாக செய்துவிடுகிறார். சிறு பட்ஜெட் படங்களுக்கு பொருத்தமான நாயகனாக இருக்கிறார். முயன்றால் முன்னணிக்கு வந்துவிடுவார். கதாநாயகியாக ஈஷா, சில காட்சிகளில் மேக்கப் மேன் மேக்கப்பை ஓவராகப் போட்டிருக்கிறார், சில காட்சிகளில் போடவில்லை. ஒரு புதிய குடும்பத்திற்குள் தனியாளாக நன்றாகவே சமாளித்திருக்கிறார். கீதனின் காதலியாக நடித்திருக்கும் காயத்ரிக்கு அவ்வளவாக வேலை இல்லை. கிராமத்துக்குள் வரும் ஒரு மாடர்ன் மங்கையாக வந்தாலும், கிளைமாக்சில் கொஞ்சம் கண்ணீர் விட வைக்கிறார். சங்கிலி முருகன், அர்ஜுனன் நகைச்சுவை சிரிக்க வைத்துள்ளது. இளையராஜாவின் இசையில் வழக்கம் போல பின்னணி இசை சூப்பர். பாடல்களில் மொத்தமாக ஏமாற்றிவிட்டார். முதல் படம், அடுத்த படத்தை இன்னும் அதிகமாக விளம்பரப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சிக்கலாம் பிரான்சிஸ் மார்க்கஸ்.

Read Previous

Iraivi – Audio Launch Announcement – Video

Read Next

விஜய் 60 படப்பிடிப்பு ஆரம்பம்