மாரி 2 - விமர்சனம்
22 Dec 2018
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு நிறையவே இரண்டாம் பாகப் படங்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘மாரி 2’ படமும் இணைந்துள்ளது.
முதல் பாகத்தை முழுவதுமாக கலகலப்பான படமாகவே கொடுத்திருந்தார்கள். இந்த இரண்டாம் பாகத்தை பாதி சென்டிமென்ட், பாதி கலகலப்புடன் கொடுத்திருக்கிறார்கள்.
தனுஷ் ரசிகர்கள் எப்படிப்பட்ட காட்சிகளை ரசிப்பார்கள் என்பதைப் புரிந்து வைத்து அதற்கேற்றபடி பல காட்சிகள் அமைத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.
ஏரியாவில் ஜாலியாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் தனுஷைக் காதலிக்கிறார் ஆட்டோ டிரைவரான சாய் பல்லவி. தனுஷைப் பழி வாங்கத் துடிக்கும் வில்லன் டொவினோ தாமஸ், ஒரு முறை தனுஷைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் போது, அவரின் குறுக்கே விழுந்து காப்பாற்றுகிறார் சாய் பல்லவி. இதனால், சாய் பல்லவியால் நடக்க முடியாமல் போகிறது. தன் ரவுடியிசத்தை விட்டு, ஊரை விட்டுச் செல்லும் தனுஷ், சாய் பல்லவியைத் திருமணம் செய்து கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார். எட்டு வருடங்களுக்குப் பிறகு விதி அவரை மீண்டும் சென்னைக்கு வரவழைக்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தமிழ் சினிமாவில் ஜாலியான ஒரு ரௌடி கதாபாத்திரம் என்றால் அது மாரி கதாபாத்திரமாகத்தான் இருக்கும். ரௌடி மாரியாக இருக்கும் காட்சிகளில், வழக்கம் போல அசத்துகிறார் தனுஷ். அதன் பின் பொறுப்பான கணவனாக, அப்பாவாக அவருடைய கதாபாத்திரம் மாறுகிறது. ரௌடி மாரி அவ்வளவுதானா என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் மாரியாக மாறி மிரட்டுகிறார். ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டவர்கள் கூட படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை நிறுத்திவிட்டார்கள். தனுஷ், இன்னும் நிறுத்தாமல் தொடர்கிறார். இந்தப் படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் அதிகமாகவே உள்ளன.
தமிழில் அறிமுகமான ‘தியா’ படத்தில் கிடைக்காத பெயரும், புகழும் இந்தப் படத்தின் மூலம் சாய் பல்லவிக்குக் கிடைத்துவிடும். அராத்து ஆனந்தி என்ற ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் அவ்வளவு உற்சாகத்துடன் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ஜோதிகா, நஸ்ரியா ஆகியோரது இடத்தை சாய் பல்லவி பிடிக்க நல்ல வாய்ப்பு. அதை பிடிப்பாரா என்பதை அவர் தொடர்ந்து நடிக்கும் படங்களை வைத்துதான் சொல்ல முடியும்.
அரசு உயர் அதிகாரியாக வரலட்சுமி. தனுஷின் அல்லக்கைகளாக ரோபோ சங்கர், வினோத். வில்லனாக டொவினோ தாமஸ். தனுஷின் நண்பனாக கிருஷ்ணா. இவர்களில் வில்லன் கதாபாத்திரத்திற்கு மட்டும் வேறு யாரையாவது தேர்வு செய்திருக்கலாம். தனுஷை மிரட்டும் அளவிற்கு அவரின் நடிப்பு எடுபடவில்லை.
யுவனின் இசையில் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாக ‘ரௌடி பேபி’ இருக்கும். பாடலுக்கான அரங்க அமைப்பும், ஒளிப்பதிவும், தனுஷ், குறிப்பாக சாய் பல்லவின் நடனமும் அசத்தலோ அசத்தல்.
இடைவேளை வரை கலகலப்பாக இருக்கும் படம், அதன் பின்னர் மிகவும் ஹெவியாக நகர்கிறது. அந்த ஒரு மணி நேரத்திற்குள் பல விஷயங்களை திணித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
மாரி 2 - கொஞ்சம் மிரட்டல், அதிக சென்டிமென்ட்.