‘கேம் சேஞ்ஜர்’ தோல்வி விமர்சனம், மன்னிப்பு கேட்ட அல்லு அரவிந்த்
11 Feb 2025
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் அல்லு அரவிந்த். நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பா, நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர்.
அல்லு அரவிந்த் தயாரிப்பில் வெளியான ‘தண்டேல்’ படத்தின் நிகழ்ச்சி கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் மேடையில் பேசும் போது அல்லு அரவிந்த், “ஒரே வாரத்தில் வெற்றியும், தோல்வியும் பார்த்தவர் தில் ராஜு’ எனக் குறிப்பிட்டுப் பேசினார்.
தில் ராஜு தயாரிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த ஷங்கர் இயக்கி, ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்ஜர்’ படம் படு தோல்வி அடைந்தது. அதே சமயம் அனில் ரவிப்புடி இயக்கி வெங்கடேஷ் நடித்த ‘சங்கராந்திகி வஸ்துனம்’ 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. அதைப் பற்றித்தான் அல்லு அரவிந்த் யதேச்சையாகப் பேசினார்.
ஆனால், ‘கேம் சேஞ்ஜர்’ தோல்வி பற்றி அவர் பேசியது ராம் சரண் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், அல்லு அரவிந்த்தை சமூக வலைத்தளங்களில் டிரோல் செய்தனர். இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அல்லு அரவிந்த் அவருடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.
“சமீபத்தில் ஒரு மூத்த பத்திரிகையாளர் ராம் சரணின் ‘கேம் சேஞ்ஜர்’ பற்றிய எனது கருத்தை தெளிவுபடுத்துமாறு கேட்டார். நான் அதை நேரிடையாகப் பேச விரும்புகிறேன். ஒரு வார காலத்திற்குள் தில் ராஜு ஏற்றத் தாழ்வுகளை சந்தித்ததை சொல்ல விரும்பினேன். தற்செயலாக நான் அதைப் பேசினேன்.
ஆனால், ராம் சரணைப் பற்றித் தவறாகப் பேசியதாக நினைத்து ரசிகர்கள் என்னை டிரோல் செய்தனர். என் வார்த்தைகள் தற்செயலானவை,அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
சரண் என் மகனைப் போன்றவர், அவர் எனது உறவினர். நாங்கள் ஒரு அழகான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறோம். எனவே, எங்களை விட்டுவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் சொன்னது தவறு என்பதை உணர்ந்தேன். அதைப் பற்றி பின்னர் வருத்தப்பட்டேன்,” என்று கூறியுள்ளார்.
அல்லு அரவிந்த் மகன் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த ‘புஷ்பா 2’ படம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதே சமயம் ஷங்கர் இயக்கத்தில் ஆவலுடன் நடித்த ராம் சரணின் ‘கேம் சேஞ்ஜர்’ 200 கோடி வசூலைக் கூடப் பெற முடியாமல் படுதோல்வியைத் தழுவியது.
Tags: allu aravind, ram charan, game changer