விஸ்வாசம் - விமர்சனம்
10 Jan 2019
தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ பாசக் கதைகளைப் பார்த்திருக்கிறோம். அவை அனைத்தும் முழுக்க முழுக்க சென்டிமென்ட் படங்களாகவே இருக்கும்.
முன்னணி ஹீரோக்கள் பலரும் அப்படிப்பட்ட சென்டிமென்ட்டை படம் முழுவதும் வைக்க மாட்டார்கள். பெரும்பாலும் ஆக்ஷனைத்தான் அதிகம் சேர்ப்பார்கள்.
ஆனால், இந்தப் படத்தில் ஒரு அப்பாவின் பாசத்தை மையமாக வைத்து, அஜித் ரசிகர்களையும் திருப்திப்படுத்தி, ஆக்ஷன், சென்டிமென்ட் என இரட்டை சவாரி செய்திருக்கிறார்கள்.
தேனி மாவட்டம், கொடுவிளார்பட்டியில் அலப்பறையாக வாழ்ந்து கொண்டிருப்பவர் அஜித். அவரது ஊருக்கு வரும் டாக்டர் ஆன நயன்தாராவுக்கும், அஜித்துக்கும் காதல். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடிகிறது. நயன்தாரா அழகான பெண் குழந்தைக்குத் தாயாகிறார். குழந்தை பிறந்த பின்னும் அடிதடி, பஞ்சாயத்தில் இறங்குகிறார் அஜித். ஒரு முறை அவர்களது குழந்தைக்கும் ரத்தக் காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராட, கணவனை விட்டுப் பிரிந்து குழந்தையுடன் தன் ஊரான மும்பை செல்கிறார் நயன்தாரா.
10 வருடங்கள் கழித்து, தங்கள் ஊர் திருவிழாவுக்காக நயன்தாராவை அழைக்கச் செல்கிறார் அஜித். சென்ற இடத்தில் சொந்த மகளுக்கே அவர் ஒரு வேலைக்காரன் போல ஆகும் சூழல் வருகிறது. தன்னை யார் என்று அவரது மகளிடம் காட்டிக் கொண்டாரா, அவரும் நயன்தாராவும் மீண்டும் இணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை.
தூக்குதுரையாக எதிரிகளை தூக்கித் தூக்கி அடிக்கிறார் அஜித். படத்தில் அவருடைய ஆக்ஷனுக்கென்றே சில பல காட்சிகளை வேண்டுமென்றே திணித்திருக்கிறார்கள். அதிலும் அந்த டாய்லட் பைட், இடைவேளை பைட் இரண்டுமே அசத்தலோ அசத்தல். சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்திலும் தனி அழகுடன் இருக்கிறார் அஜித். அதிலும் இந்தப் படத்தில் கிடா மீசை, கரடு முரடான தாடி என வேற லுக். காமெடி, நகைச்சுவை, சென்டிமென்ட் என நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைவருக்குமான ஒரு ஏரியாவில் பயணிக்கிறார். அதிலும், மகள் மீதான சென்டிமென்ட்டில் சில காட்சிகளில் கண்களில் கண்ணீர்.
ஒரே படத்தில் மூன்று விதமான தோற்றத்தில் நயன்தாரா. முதலில் கொஞ்சமே கொஞ்சம் கிளாமருடன் அஜித்தைக் காதலிக்கும் டாக்டர், அப்புறம் கிராமத்து மனைவியாகவே மாறிய டாக்டர், பின்னர் தொழிலதிபர் கம் அம்மாவாக மாறிய டாக்டர். இதில் காதலி கதாபாத்திரத்தில் மட்டும் ஓகே. மற்ற இரண்டும் அவருக்குப் பொருந்தவில்லை.
அஜித்துக்கு காமெடிக்குக் கை கொடுக்க ரோபோ சங்கர், பில்ட்அப்புக்குக் கை கொடுக்க தம்பி ராமையா. கார்ப்பரேட் முதலாளி ஆக ஜெகபதி பாபு படத்தின் வில்லன். விவேக், கோவை சரளா, யோகிபாபு ஆகியோர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இமான் இசையில், ‘கண்ணான கண்ணே...’ திரும்பத் திரும்பக் கேட்க வைக்கும். ‘வேட்டிக்கட்டு, அடிச்சித் தூக்கு’ அஜித்தின் மாஸுக்காக. அஜித்திற்காகவே பல வசனங்களை சிறப்பாக சேர்த்திருக்கிறார்கள். அனைத்திற்கும் அஜித் ரசிகர்களின் ஆரவாரம் ஒலிக்கிறது.
படத்தில் பெரிதாக கதை, திருப்பம், வித்தியாசம் என்றெல்லாம் எதுவுமில்லை. தன் ரசிகர்களுக்காக மாஸாக ஒரு படம் செய்யலாம் என அஜித் யோசித்திருக்கிறார். அதற்கு முழு விஸ்வாசமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா.
படம் அஜித் ரசிகர்களுக்கும் பிடிக்கும், பெண்களுக்கும் பிடிக்கும்.