பேட்ட - விமர்சனம்
10 Jan 2019
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள், அந்தந்தக் காலகட்டங்களில் பிரபலமாகும் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோரைத் தங்களது படங்களில் பயன்படுத்திக் கொள்வது வழக்கம்.
அப்படி கடந்த சில வருடங்களில் வித்தியாசமான படங்களைக் கொடுத்த இயக்குனர் என்ற பெயரைப் பெற்ற கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு அவர் எடுத்த முடிவு சரியானதுதான். ஆனால், அது அவருடைய கதாபாத்திரத்திற்காக மட்டுமே தான் சிறப்பாக அமைந்திருக்கிறது. கதைக்காகவும், திரைக்கதைக்காகவும், அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்பதுதான் உண்மை.
ஒரு கல்லூரியின் ஹாஸ்டல் வார்டன் ஆக வேலைக்குச் சேர்கிறார் ரஜினி. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் இல்லாமல் அந்தத் தற்காலிக வேலைக்கே சிபாரிசு மூலம்தான் சேர்கிறார். அந்த ஹாஸ்டலில் தங்கியிருக்கும் சனன்த் என்ற மாணவரைக் கொலை செய்ய ஒரு ரவுடி கும்பல் வருகிறது. அந்தக் கும்பலிடமிருந்து அவரைக் காப்பாற்றுகிறார் ரஜினி. அதன்பின்னர்தான் தான் யார் என்ற உண்மையைச் சொல்கிறார். சனன்த் அப்பா சசிகுமாரும், ரஜினிகாந்தும் நண்பர்கள். ஊரில் நடந்த தகராறில் சசிகுமார், தன் மனைவி, மகள் ஆகியோரைப் பறி கொடுக்கிறார். நண்பனின் மகனான சனன்த்துக்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாக்கிறார். சனன்த்தைக் கொல்ல வந்தவர்களை அவர் என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இவ்வளவு ஜாலியான, கலகலப்பான ரஜினியை படத்தின் முதல் பாதியில் பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு நிச்சயம் ஆச்சரியம் இருக்கும். மாணவர்களை தன் வழிக்குக் கொண்டு வருவது, ஹாஸ்டலில் நடக்கும் சண்டை, சச்சரவுகளை முடிவுக்குக் கொண்டு வருவது என அவை சம்பந்தப்பட்ட காட்சிகளில் ரஜினியிசம் வழிந்தோடுகிறது. இடைவேளைக்குப் பின் முழுமையான ஆக்ஷனுக்குத் தாவுகிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரஜினி, ரஜினி, ரஜினி மயமாகவே உள்ளது.
பிளாஷ்பேக்கில் ரஜினியின் மனைவியாக த்ரிஷா. அவர்தானா அது என்று உற்று கவனிப்பதற்குள் அவர் கொல்லப்படுகிறார். ஒரு வரி வசனம் பேசியிருந்தால் அதிகம். அதன் பின், ஹாஸ்டல் வார்டனாக இருக்கும் போது ரஜினிகாந்த், சிம்ரனை சந்தித்துப் பேசுகிறார். கல்லூரியில் படிக்கும் மகள் இருக்கும் சிம்ரனுடன், ரஜினிக்குக் காதல் வருவது போலக் காட்டுவதெல்லாம் ஐயோடா ரகம்.
ரஜினியின் நண்பராக சசிகுமார். ‘தளபதி’ ரஜினி, மம்முட்டி போன்ற நட்பு. ஆனால், அந்த அளவிற்கு மனதில் பதியவில்லை.
கடந்த வருடம் வெளிவந்த ‘96’ படத்தின் மூலம் பெரும் பாராட்டைப் பெற்ற விஜய் சேதுபதி, த்ரிஷா இந்தப் படத்தில் முற்றிலுமாக வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் நடிப்புக்குத் தீனி போடும் ஒரு காட்சி கூட படத்தில் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். பாபி சிம்ஹாவும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, கார்த்திக் சுப்பராஜுக்காகவா அல்லது ரஜினிக்காகவா ?.
வில்லனாக நவாசுதீன் சித்திக். மதுரை மண்ணுக்கே உரிய கதாபாத்ரத்திற்கு ஒரு ஹிந்தி நடிகரை நடிக்க வைத்திருக்கிறார்கள். அதில் அவர் சிறிதும் பொருத்தமாக இல்லை.
சனன்த், மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், ஆடுகளம் நரேன், குரு சோமசுந்தரம் மற்ற கதாபாத்திரங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து அவர்களது இருப்பைக் காட்டிக் கொள்கிறார்கள்.
அனிருத் இசையில், ‘மரண மாஸ், எத்தனை சந்தோஷம்’ பாடல்கள் ஆட்டம் போட வைக்கும். அதிலும் ‘எத்தனை சந்தோஷம்’ பாடலில் ரஜினியின் துள்ளலான ஆட்டம் சூப்பர்.
ஒரு சாதாரண பழி வாங்கும் கதையை, ரஜினிகாந்த் என்ற மெஸ்மரிசத்தை வைத்து இடைவேளை வரை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். ரஜினியின் ஒவ்வொரு அசைவும் அவருடைய ரசிகர்களால் ரசிக்கப்படும். ஆனால், இடைவேளைக்குப் பின், கதை எங்கெங்கோ நகர்கிறது. தேவையற்ற சில காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைத்துவிட்டது.
துப்பாக்கியை எடுத்து யார் எத்தனை பேரை சுட்டார்கள் என்பதெல்லாம் கணக்கேயில்லை. யு டூ கார்த்திக் சுப்பராஜ்.
‘கபாலி, காலா’ ரஜினியைப் பார்த்து போரடித்த ரஜினி ரசிகர்களுக்கு ‘பேட்ட’ ஒரு பராக் பராக் படம்.