கேஜிஎப் - விமர்சனம்

22 Dec 2018
கன்னடத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வரும் படங்கள் மிக மிகக் குறைவு. எப்போதோ ஒரு முறைதான் அப்படி படங்கள் வரும். அவையும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதில்லை. அதை இப்போது பொய்யாக்க வந்திருக்கும் படம்தான் ‘கேஜிஎப்’. கன்னட சினிமாவில் இப்படிப்பட்ட ஒரு படத்தைக் கொடுக்க தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகரும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. ஒரு டப்பிங் படம் பார்க்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் இப்படத்தை ரசிக்க வைத்திருப்பதே படக்குழுவினருக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றி. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் இது. டிவி நடிகராக இருந்து சினிமாவில் அறிமுகமாகி இன்றை முன்னணி கன்னட நடிகர்களில் ஒருவராக இருபபவர் யாஷ். ஆங்கிலத்தில் கேஜிஎப் என அழைக்கப்படும் கோலார் தங்க வயல் பற்றிய ஒரு கதைதான் இந்தப் படம். அந்த தங்க வயலில் தமிழர்கள்தான் அதிகம் வேலை பார்த்தார்கள் என்பது ஒரு வரலாற்று உண்மை. அந்தத் தங்கச் சுரங்கம் 2002ம் ஆண்டு மூடப்பட்டது. அந்த தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்து கற்பனை கலந்து மிரட்டலான ஒரு படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். அப்பா யார் என்று தெரியாத, அம்மாவை சிறு வயதில் இழந்த யாஷ், வேலை தேடி மும்பை செல்கிறார். அங்கு பல வேலைகளைச் செய்து யாராலும் அடக்க முடியாத ஒரு தாதாவாக வளர்ந்து நிற்கிறார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் அவரிடம் கேஜிஎப்-ல் தங்கச் சுரங்கம் வைத்து நடத்தும் ஒருவரைக் கொலை செய்யும் வேலையை ஒப்படைக்கிறார்கள். அந்த வேலையை ஏற்றுக் கொண்டு, ஒரு கூலித் தொழிலாளியாக அடிமை வேலை செய்ய அந்த சுரங்கத்துக்குள் செல்கிறார் யாஷ். அங்கு சென்ற பின் அவர் அந்த சுரங்கத்தின் முதலாளியைக் கொன்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். மும்பைப் பின்னணியில் கதை நடக்கும் போது ஒரு அதிரடியான தாதா கதையாகத்தான் நடக்கிறது. அதன்பின் கதை கேஜிஎப் நகர்ந்ததும் விஷுவலாக படத்தைப் பார்க்கும் போது என்ன ஒரு பிரம்மாண்டம். அந்த சுரங்கம், அதில் வேலை செய்யும் அடிமைகள், கொடூரமான அடக்கு முறை மிரட்டலான வேறு ஒரு படத்தைக் கண்டு முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். யாஷின் தோற்றமும் அவருடைய நடை, உடையும் அவரை மிகப் பெரும் தாதா என பார்த்த உடனேயே சொல்ல வைக்கின்றன. தமிழ் சினிமாவில் கூட இப்படி ஒரு தாதாவைக் காட்டியதில்லை என சொல்லும் அளவிற்கு அவருடைய கதாபாத்திரத்தை மிரட்டலாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். தெலுங்குப் படங்களில் பாலகிருஷ்ணா  ஆக்ஷனில் மிரட்டுவதை விட அதிகம் மிரட்டுகிறார் யாஷ். படம் முழுவதையுமே இவர் ஆக்கிரமித்திருக்கிறார். அதனால், மற்றவர்களின் நடிப்பு கூட அதிகம் வெளித் தெரிய வாய்ப்பில்லை. நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி. இவரைக் காதலிப்பதில் கூட முரட்டுத்தனத்தைத்தான் வெளிப்படுத்துகிறார் யாஷ். யாஷ் பற்றி முதலில் தெரியாமல் வெறுத்து ஒதுக்கும் ஸ்ரீநீதி, ஒரு கட்டத்தில் யாஷைப் புரிந்து கொண்டு காதலிக்க ஆரம்பிக்கிறார். வித்தியாசமான தோற்றங்களில் சில வில்லன்கள் வருகிறார்கள். அவர்கள் பெயர் என்ன என்று தெரியவில்லை, இருந்தாலும் ஒவ்வொருவரையும் பார்ப்பதற்கே கொஞ்சம் பயமாக இருக்கிறது. அவ்வளவு முரட்டுத்தனமாய் இருக்கிறார்கள். ரவி பர்சுர் பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை அமைப்பு, படத் தொகுப்பு, ஆக்ஷன் என ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அசோக்கின் வசனம் ஒவ்வொன்றும் டப்பிங் படம் என்பதையும் மீறி நேரடிப் படத்தைப் பார்க்கும் உணர்வைத் தருகின்றன. படத்தில் உள்ள அளவுக்கதிகமான வன்முறைதான் படத்திற்கு மைனஸ், பிளஸ். ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டையிடுகிறார்கள். அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வரும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது இந்த முதல் பாகம். கேஜிஎப் - Kannada Gold Film

Share via: