அடங்க மறு - விமர்சனம்
22 Dec 2018
தமிழ் சினிமாவில் எத்தனை போலீஸ் கதைகள் வந்தாலும் ஒரு சில இயக்குனர்கள்தான் வித்தியாசமான போலீஸ் கதைகளைக் கொடுக்கிறார்கள். அந்த விதத்தில் இந்தப் படத்தின் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல், ஒரு விறுவிறுப்பான போலீஸ் கதையைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
போலீஸ் வேலைக்குச் சேர்ந்த நான்கே நாட்களில் தன் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கும் க்ரைம் பிராஞ்ச் சப் இன்ஸ்பெக்டர் ஜெயம் ரவி. ஒரு இளம் பெண்ணின் கற்பழிப்புக் கொலை வழக்கு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அந்தக் கொலை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சிறையில் தள்ளுகிறார் ஜெயம் ரவி. கோடீஸ்வர வீட்டு இளைஞர்களான அந்தக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே வெளியே வருகிறார்கள். தங்களை அவமானப்படுத்திய ஜெயம் ரவியின் குடும்பத்தினரை அவர்கள் கொலை செய்கிறார்கள். போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அந்தக் குற்றவாளிகளை பழிக்குப் பழி வாங்க புறப்படுகிறார் ஜெயம் ரவி. அவர்தான் அந்தக் குற்றவாளிகளைக் கொலை செய்கிறார் என்று தெரிந்தும் அவரைக் கைது செய்ய முடியாமல் தவிக்கிறது போலீஸ். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
இப்போதிருக்கும் முன்னணி நடிகர்களில் போலீஸ் வேடம் ஏற்று நடிப்பதில் பொருத்தமான ஒரு நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. அவர் போலீஸ் வேடங்களில் நடிக்கும் படங்கள் நல்ல வெற்றியைக் கொடுத்து வருகின்றன. அந்த விதத்தில் இந்தப் படமும் அவருக்கு ஒரு வெற்றிப் படம்தான். தன் குடும்பத்தையே அழித்தவர்களை சொல்லி வைத்து ஒவ்வொருவராகக் கொலை செய்யும் விதம் பரபரப்பான ஒன்று. அவருக்குள் இருக்கும் கோபத்தையும், ஆவேசத்தையும் அடக்கி வைக்காமல், போலீசுக்கு அடங்க மறுத்து பழி வாங்குவதில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ராஷி கண்ணாவுக்கு அதிக வேலையில்லை. படத்தின் ஆரம்பத்திலேயே அவரை ஜெயம் ரவியின் காதலியாகக் காட்டி விடுகிறார்கள். நாயகி என்பதால் ஒரு டூயட்டையும் அவருக்கு வைத்துவிட்டார்கள்.
படத்தில் மொத்தம் பத்து வில்லன்கள். பத்து வில்லன்களுக்குமே ஒவ்வொரு காட்சியிலாவது நடிப்பை வெளிப்படுத்தும்படியான காட்சி இருக்கிறது. ஜெயம் ரவியை எதிர்ப்பதில் அந்தக் கொலை குற்றவாளிகளை விட, உயர் போலீஸ் அதிகாரிகளான சம்பத், மைம் கோபி ஆகியோர்தான் தீவிரமாக இருக்கிறார்கள்.
சாம் சிஎஸ் இசையில் பாடல்களுக்கு அதிக வேலையில்லை. பின்னணி இசையில் ஆக்ஷன் படத்துக்குரிய பரபரப்பை கூட்டுகிறார்.
அதிகாரமும், பணக்காரத் திமிரும் ஒருவனை எப்படியெல்லாம் துன்பப்படுத்த முடியும் என்பதை அழுத்தமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர். குற்றவாளிகளைக் கடத்துவதில் வித்தியாசம் இருந்தாலும் அவர்களை சுலபமாகக் கடத்துவதில் சினிமாத்தனம் நிறைய உண்டு. ரஜினிகாந்த் நடித்த ‘நான் மகான் அல்ல’ படத்தின் சாயல் கொஞ்சம் படத்தில் இருக்கிறது.
அடங்க மறு - ஆவேசம்