ஒரு கொலை வழக்கில் குற்றவாளியே காவல்நிலையத்துக்கு வந்து சரணடைந்துவிட்டால், அந்த வழக்கை விசாரிப்பதில் காவல்துறைக்கு என்ன சிக்கல் இருக்கப் போகிறது? ஆனால், அந்த நபர் சொல்வது உண்மையா, அவர் நினைப்பது தான் உண்மையா, அல்லது அவரது மனதை வைத்து வேறு ஒருவர் விளையாடுகிறாரா என்ற கேள்வி எழுந்தால், அந்த விசாரணை எந்தப் பாதையில் செல்லும்? இப்படியான வித்தியாசமான உளவியல் பின்னணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில், திருமாறன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘கிட்டி’.
அசோக் குமார் நாயகனாக நடித்திருக்கும் இப்படம், கிரைம் இன்வெஸ்டிகேஷனை மையமாக வைத்தாலும், அதற்குள் உளவியல் மர்மத்தையும் கலந்து சொல்ல முயற்சிக்கிறது.
ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் விஜய், தனது காதலி பூஜாவையும், தன்னை கொலை செய்ய வந்த ஒரு ரவுடியையும் கொலை செய்துவிட்டதாக கூறி காவல்நிலையத்தில் சரணடைகிறார். இரண்டு கொலைகளையும் தானே செய்ததாக விஜய் ஒப்புக்கொண்டாலும், அவரது வாக்குமூலத்தில் இருக்கும் சில முரண்பாடுகள் காவல்துறை அதிகாரிக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதையடுத்து விஜயின் கடந்த காலம், அவரது காதல் வாழ்க்கை மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களின் பின்னணி என விசாரணை விரிவடைகிறது.
விஜய் சொல்வது உண்மையா? அவர் உண்மையிலேயே கொலை செய்தாரா? அப்படியானால் அந்தக் கொலைகளுக்கான காரணம் என்ன? அல்லது விஜயின் மனநிலையைப் பயன்படுத்தி வேறு யாராவது இந்தக் குற்றங்களை அரங்கேற்றியிருக்கிறார்களா? என்ற கேள்விகளுக்கான பதில்களை நோக்கி கதை நகர்கிறது. ஆரம்பத்தில் சாதாரணமான கொலை விசாரணையாக தொடங்கும் திரைக்கதை, போகப்போக உளவியல் சார்ந்த மர்மமாக மாறுவது படத்தின் சுவாரஸ்யமான அம்சமாக இருக்கிறது.
விஜய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோக் குமார், படத்தின் மிக முக்கியமான பலமாக இருக்கிறார். கதாபாத்திரத்தின் மனக்குழப்பம், பயம், காதல், கோபம் என மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக ஒரே கதாபாத்திரத்தை வெவ்வேறு கோணங்களில் பார்க்க வைக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு கதைக்கு வலு சேர்க்கிறது. பூஜாவாக நிஷா இஸ்மத், மகாவாக சங்கவி தர்மராஜ் மற்றும் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் சிமு அத்வானி ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். காவல்துறை அதிகாரியாக வரும் யுகன், விசாரணையின் தீவிரத்தை தனது உடல்மொழி மற்றும் நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
ஒரு குற்றத்தை மையமாக வைத்து கதையை சொல்லாமல், அந்தக் குற்றத்தைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் மனநிலையையும் திரைக்கதையின் முக்கியப் பகுதியாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் நெடுமாறன் மோகன்தாஸ். யார் குற்றவாளி என்பதை மட்டும் தெரிந்துகொள்வதைவிட, நடந்த சம்பவங்களை விஜய் எந்த கோணத்தில் பார்க்கிறார் என்பதையே முக்கியமாக்கியிருப்பது வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கிறது. குறிப்பாக முதல் பாதியில் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பி, இரண்டாம் பாதியில் அவற்றுக்கான பதில்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தும் விதம் திரில்லர் தன்மையை தக்க வைக்கிறது.
அதேநேரம், கதையில் தொடர்ந்து பல திருப்பங்களையும் புதிய தகவல்களையும் அடுக்கிக் கொண்டே செல்வதால், சில இடங்களில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் உளவியல் அம்சங்களுடன் பல சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் போது, திரைக்கதை சற்று சிக்கலாக மாறுகிறது.
வி.எஸ். வேலனின் ஒளிப்பதிவு, காதரின் பின்னணி இசை ஆகியவை படத்தின் மர்மம் மற்றும் பதற்றமான காட்சிகளுக்கு துணை நிற்கின்றன. குறிப்பாக பின்னணி இசை விசாரணை காட்சிகளின் பரபரப்பை அதிகரிக்கிறது. கார்த்திக் பாண்டியனின் படத்தொகுப்பும் கதையின் வெவ்வேறு அடுக்குகளை ஒன்றோடு ஒன்று இணைக்க உதவுகிறது.
ஒரு கொலை நடந்திருக்கிறது, அதற்கான குற்றவாளியும் தான்தான் என்று ஒருவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அவர் சொல்வதையே நம்ப முடியாத நிலை உருவாகும்போது, உண்மையை கண்டுபிடிப்பது எப்படி? அந்தக் கேள்வியை மையமாக வைத்து, வழக்கமான கொலை விசாரணைக் கதைக்கு உளவியல் மர்மத்தை சேர்த்து கொடுத்திருக்கிறது ‘கிட்டி’. சில இடங்களில் குழப்பம் இருந்தாலும், வித்தியாசமான கதைக்களமும் அசோக் குமாரின் நடிப்பும் படத்தை கவனிக்க வைக்கிறது.