அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பம் வளர வளர பல சிக்கல்களும் சேர்ந்தே வளர்ந்து கொண்டிருக்கின்றன.
பேசுவதற்கு மட்டுமே இருந்த மொபைல் போன்கள், ஆன்ட்ராய்டு கண்டுபிடிக்கப்பட்ட பின் அதன் வளர்ச்சி தாறுமாறாக வளர்ந்துவிட்டது.
இணையசேவைகள் மூலம் பலவிதமான வசதிகளை ஆன்ட்ராய்டு போன்கள் மூலம் பயன்படுத்த முடிகிறது. அதே சமயம் அந்த மொபைல் போன்கள் மூலம் சில தேவையில்லாத சிக்கல்களும் வருகின்றன. அது எப்படி நம் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை இந்த ‘X வீடியோஸ்’ படம் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சஜோ சுந்தர்.
இணையதளங்களில் உள்ள ஆபாச இணையதளங்களைப் பற்றிய கட்டுரை ஒன்றை எழுத ஆரம்பிக்கிறார் பத்திரிகையாளரான அஜய்ராஜ் எழுத ஆரம்பிக்கிறார். அதற்கான சில தகவல்களை அவர் தேடும் போது அப்படிப்பட்ட ஆபாச இணையதளத்தில் அவருடைய நண்பர் மனைவியின் வீடியோ ஒன்றும் இருக்கிறது. அது பற்றி நண்பனிடம் சொல்ல, அந்த நண்பர் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் மனமுடையும் அஜய்ராஜ், அந்த ஆபாச இணையதளத்தைக் கண்டுபிடித்து சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க முயல்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் அவ்வப்போது சில அரை நிர்வாண காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கதைக்கு அவை அவசியமானவையாக இருந்தாலும் ஒரு தமிழ்ப் படத்தில் அப்படிப்பட்ட காட்சிகளைப் பார்ப்பது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. அந்தக் காட்சிகள் படத்திற்குத் தேவையானவை, இல்லையென்றால் அதன் தாக்கமும் ரசிகர்களுக்கு ஏற்படாது.
படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜய்ராஜ், இயல்பாக நடித்துள்ளார். அவருடைய நண்பனின் மனைவியாக நடித்துள்ள அக்ரிதி சிங், அரை நிர்வாணக் காட்சியில் தைரியமாக நடித்துள்ளார். படத்தில் வில்லனாக பிரபுஜித். பணம் சம்பாதிப்பதற்காக பெண்களின் ஆபாச வீடியோக்களை வைத்து இணையதளத்தை ஆரம்பிக்கிறார். பணத்திற்காக அவர் செய்வதை நியாயப்படுத்தும் ஒரு கதாபாத்திரம்.
தெரிந்த முகங்கள் படத்தில் இல்லாதது மட்டுமே ஒரு குறை, மற்றபடி படத்தின் கதைக்காகவும், மொபைல், இன்டர்நெட் யுகத்தில் என்னவெல்லாம் தவறுகள் நடக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும் இந்தப் படத்தை தவறாமல் பார்க்கலாம்.
https://youtu.be/4qjgAhII_28