பீப் – விமர்சனம்

ஒரு புகைப்படத்தைப் பார்த்து, அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவத்திற்குள் மனதளவில் பயணித்து, அந்த இடத்தில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ளும் சக்தி கொண்ட ஒரு இளைஞன், ஒரு கொலை வழக்கை துப்பறியத் தொடங்கினால் என்ன நடக்கும்? அதுவும் காவல்துறையால் கூட கண்டுபிடிக்க முடியாத ஒரு கொலையின் பின்னணியை, அறிவியல் பூர்வமான தனது சக்தியின் மூலம் கண்டுபிடிக்க முயற்சித்தால், அந்த விசாரணை எந்த அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்? இப்படியான வித்தியாசமான கதைக்களத்துடன், அறிவியல், கிரைம் மற்றும் சஸ்பென்ஸ் ஆகியவற்றை இணைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ‘பீப்’.

எம்.பி.ஏ மாணவரான ராகவ் ரங்கநாதன், ஒரு புகைப்படத்தைப் பார்த்தால் அதற்குள் பயணித்து, அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளும் வித்தியாசமான சக்தி கொண்டவர். இது கடவுள் தனக்கு கொடுத்த வரம் என்று அவரது நண்பர்கள் கூறினாலும், தனது சக்திக்கு அறிவியல் ரீதியான காரணம் இருப்பதாக ராகவ் நம்புகிறார்.

ஒரு நடிகையின் தீவிர ரசிகரான ராகவ், அவரை நேரில் சந்திப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில், பாலியல் தொழிலாளியான யாமினி லக்‌ஷ்மணனுடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் நட்பாக பழகும் இருவருக்கும் இடையிலான உறவு நாளடைவில் நெருக்கமாக, யாமினி மீது ராகவ் அதிக அக்கறை காட்டத் தொடங்குகிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக, அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து யாமினி உயிரிழக்கிறார். அவரது மரணம் தற்கொலை அல்ல, கொலை என்பது தெரிய வந்தாலும், குற்றவாளியை சிக்க வைக்கும் அளவுக்கு எந்தவொரு முக்கிய ஆதாரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் விசாரணை மந்தமடைகிறது.

மறுபக்கம், தனது விசித்திரமான சக்தியை பயன்படுத்தி யாமினியின் மரணத்திற்கான பின்னணி மற்றும் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க ராகவ் முயற்சி செய்கிறார். ஆனால் அவராலும் உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இருப்பினும், யாமினியின் மரணத்திற்கு காரணமானவரை கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற முடிவில் ராகவ் தீவிரமாக களமிறங்குகிறார்.

அதே நேரத்தில், காவல்துறையும் தங்களது பாணியில் விசாரணையை தொடர்ந்து, போதுமான ஆதாரங்களை திரட்டி குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த முயற்சிக்கிறது. இறுதியில் யாமினியை கொலை செய்தது யார்?, எதற்காக கொலை செய்தார்?, ராகவ் தனது அறிவியல் சக்தியின் மூலம் கொலையாளியை கண்டுபிடித்தாரா?, அல்லது போலீசார் தங்களது விசாரணையின் மூலம் குற்றவாளியை நெருங்கினார்களா? என்ற கேள்விகளுக்கான பதில்களை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் சொல்ல முயற்சித்திருக்கிறது ‘பீப்’.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராகவ் ரங்கநாதன், அதீத புத்திசாலித்தனம் மற்றும் வித்தியாசமான அறிவியல் சக்தி கொண்ட இளைஞன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். காவல்துறையினருக்கு இணையாக, சில நேரங்களில் அவர்களை மிஞ்சும் வகையிலும் துப்பறியும் அவரது கதாபாத்திரம் சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அவரது நீண்ட உரையாடல்கள் சற்று அதிகமாக தெரிந்தாலும், தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்.

யாமினி லக்‌ஷ்மணன், பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, கவர்ச்சிகரமான தோற்றத்திலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். நடிப்பிலும் எந்தவித குறையும் இல்லாமல் தனது கதாபாத்திரத்தை இயல்பாக கையாண்டிருக்கிறார்.

பேராசிரியர் சிதம்பரம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எல்.சண்முக சுந்தரம், அப்பாவித்தனமான முகபாவனைகளால் ஆரம்பத்திலேயே நம்மை நம்ப வைக்கிறார். ஆனால், அவரது கதாபாத்திரம் செய்யும் சில விஷயங்கள் வெளிப்படும் போது, “அடப்பாவி…” என்று சொல்ல வைக்கும் அளவுக்கு கதாபாத்திரத்தை சுவாரஸ்யமாக மாற்றியிருக்கிறார். குறிப்பாக, முகபாவனைகள் மூலமாகவே கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தியிருக்கும் அவரது நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

நடிகை நயனா கபூர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐடி ஆச்சார்யா, நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் பிரேர்னா கண்ணா, அருண் மோகன், ஷ்ரவண் ராமகிருஷ்ணன், ஜுஹி சர்மா, போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நித்திஷ், சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாலாஜி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அதிகம் பரிட்சயமான முகங்களாக இல்லாவிட்டாலும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரதீப் பத்ம குமார், இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரி, படத்தொகுப்பாளர்கள் அபிஷேக் மற்றும் விக்னேஷ்.ஆர்.எல், கலை இயக்குநர் உமேஷ் குமார், சண்டைப்பயிற்சி இயக்குநர் ராம் குமார் ஆகியோர் தங்களது பணிகளில் கதையின் களத்திற்கு ஏற்ற வகையில் பயணித்திருக்கிறார்கள். கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கு தேவையான பதற்றம் மற்றும் பரபரப்பை உருவாக்குவதில் இவர்களது பங்களிப்பு கவனம் பெறுகிறது.

நம்புவதற்கு சற்று சிரமமான ஒரு சக்தியை எடுத்துக்கொண்டு, அதற்கு அறிவியல் பூர்வமான விளக்கத்தை கொடுத்து, “இப்படியும் நடக்கலாம்” என்று பார்வையாளர்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சியை இயக்குநர் எல்.சண்முக சுந்தரம் மேற்கொண்டிருக்கிறார். அதனுடன் கொலை விசாரணையை இணைத்து திரைக்கதையை நகர்த்தியிருக்கும் விதம் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது.

அறிவியல் சார்ந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் என்றாலும், முதல் பாதியில் கிளுகிளுப்பான காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படத்தின் முதல் பாதி முழுவதும் பார்வையாளர்களின் கவனம் அந்த பக்கமே திரும்பும் வகையில் ‘பீப்’ சத்தம் அதிகமாகவே ஒலிக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் கதை மீண்டும் கொலை விசாரணைக்குள் முழுமையாக நுழைந்து, கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக இருந்தாலும், நாயகனின் அதீத பேச்சு சில இடங்களில் திரைக்கதையின் வேகத்தை குறைத்து பார்வையாளர்களை சற்று சோர்வடையச் செய்கிறது. அதே சமயம், குற்றவாளி யார் என்பது தெரிய வந்த பிறகும், அவரை எப்படி ஆதாரத்துடன் பிடிக்கப் போகிறார்கள்?, சட்டத்தின் முன் எப்படி நிறுத்தப் போகிறார்கள்? என்ற கேள்விகளை முன்வைத்து கதை தொடர்ந்து நகர்வது படத்தை மீண்டும் சுவாரஸ்யமான பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

மொத்தத்தில், வித்தியாசமான அறிவியல் சக்தியை மையமாக வைத்து, அதனுடன் கொலை விசாரணை மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ‘பீப்’, முதல் பாதியில் கிளுகிளுப்பான காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், இரண்டாம் பாதியில் தனது கிரைம் திரில்லர் முகத்தை காட்டும் படமாக இருக்கிறது.

Read Previous

மண்டாடி – விமர்சனம்

Read Next

ஆகாயம் – இசை வெளியீட்டு விழா