அரிமா நம்பி – விமர்சனம்

தயாரிப்பு – வி கிரியேஷன்ஸ் இயக்கம் – ஆனந்த் சங்கர் இசை – சிவமணி நடிப்பு – விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த், சக்ரவர்த்தி 

அடடா….ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தைப் பார்த்து எவ்வளவு நாளாச்சி. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உதவியாளர் ஆனந்த் சங்கர் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம். தனது குருவின் பெயரை முதல் படத்திலேயே காப்பாற்றி விட்டார் ஆனந்த். என்ன ஒரு வேகமான திரைக்கதை ‘துப்பாக்கி’யில் இருந்து பாயும் தோட்டாவைப் போல் அப்படி ஒரு வேகம். ‘ரிச்’ ஆன தயாரிப்பாளர்களில் ஒருவரான தாணு தயாரித்திருக்கும் படம், கேட்கவா வேண்டும் படமே ‘ரிச்சாகவும்’ ‘நச்’ என்றும் இருக்கிறது. கதை ஒரு ‘பப்’பில் வைத்து பிரியா ஆனந்தைப் பார்க்கும் முதல் பார்வையிலேயே காதலில் விழுந்து விடுகிறார் விக்ரம் பிரபு. மறுநாள் அவரைச் சந்தித்து டின்னர் சாப்பிட்டு அவள் வீட்டுக்கு சென்ற போது, அவர் கண் எதிரிலேயே ப்ரியா ஆனந்த் கடத்தப்படுகிறார். என்ன ஏது என்று பார்ப்பதற்குள் பிரியா ஆனந்த் அப்பா கொல்லப்பட, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கொல்லப்பட, களத்தில் இறங்குகிறார் விக்ரம். அவர் பிரியாவைக் கண்டு பிடித்தாரா, நடந்த கொலைகளுக்கு பின்னணி யார் என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதி கதை.    

ஒரு முதல்பட இயக்குனரிடமிருந்து இப்படி ஒரு ஆக்ஷன் த்ரில்லரா என ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்குள்ளேயே திரைக்கதை தீயாய் பற்றிக் கொள்கிறது. அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற ஆவல் அதிகரிப்பது நிஜம். அதிலும் விக்ரம் பிரபுவிற்கும், போலீசுக்கும் இடையிலான ‘ஆடு புலி ஆட்டத்தில்’ பரபரப்பு அதிகம். ஆக்ஷன் ஹீரோவாய் இந்தப் படம் மூலம் அழுத்தமாய் தடம் பதித்துள்ளார் விக்ரம் பிரபு. எந்த ஒரு ஹீரோவுக்கும் நல்ல இயக்குனர் அமைய வேண்டும். அது இந்தப் படத்தில் அமைந்திருக்கிறது. 

டெக்னிக்கலாக பல விஷயங்களை இயக்குனர் யோசித்திருக்கிறார். சிவமணியின் பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு இன்னும் வேகத்தைக் கூட்டுகிறது. தேவையற்ற காதல் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் இவையெல்லாம் கூட படத்தில் இல்லை என்பது வெளியில் வந்த பிறகுதான் ஞாபகத்திற்கே வருகிறது.  வழக்கம் போல ஒரு சில லாஜிக் மீறல்கள்தான். எதிரிகள் சுட்டாலும் ஹீரோ மீது ஒரு குண்டு கூட படாதது, வில்லன்கள், போலீசிடம் சிக்காமல் கொஞ்சம் சுலபமாக தப்பிப்பது என சில காட்சிகள் மட்டும்தான் நெருடலாக உள்ளது. 

அரிமா நம்பி – நம்பி பார்க்கலாம்…  

Read Previous

அசத்தலாக சென்னைக்கு வந்த அஞ்சலி…

Read Next

அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் – கே.எஸ். ரவிக்குமார்

Most Popular