தயாரிப்பு – அன்பு பிக்சர்ஸ் – ஜெ. அன்பழகன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அமீர் இசை – யுவன்ஷங்கர் ராஜா பாடல்கள் – அறிவுமதி, சினேகன் ஒளிப்பதிவு – தேவராஜ் படத்தொகுப்பு – எஸ்.பி. அகமது சண்டை – ராஜசேகர் கலை – ஜாக்கி, ஆனந்த் நடனம் – தினேஷ், சின்னி பிரகாஷ் மக்கள் தொடர்பு – நிகில் நடிப்பு – ஜெயம் ரவி, நீது சந்திரா, அனிருத், பாபு ஆண்டனி, சுதா சந்திரன் மற்றும் பலர். வெளியான தேதி – 22 பிப்ரவரி 2013.
அமீர் இயக்கத்தில் ஏறக்குறைய 6 ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கும் படம். முதல் முறையாக ஒரு ஆக்ஷன் படத்தை இயக்கியிருக்கிறார் என்ற ஆவலுடன்தான் அனைவரும் படம் பார்க்கச் செல்வார்கள்.
இப்படிப்பட்ட படங்களை இயக்குவதற்கு எவ்வளவோ இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் ராம், பருத்தி வீரன் போன்ற படங்களை இயக்கிய அமீரிடமிருந்து இப்படி ஒரு ஆக்ஷன் படத்தை எதிர்பார்க்கவில்லை.
படத்தில் நல்லவர்கள் யாராவது இருக்கிறார்களா எனத் தேடிப் பார்க்க வைத்துள்ளது படத்திலுள்ள கதாபாத்திரங்களின் பாத்திரப் படைப்பு. ஒருவர் கூட நல்லவராக காட்டப்படவில்லை, அம்மாவாக வரும் சுதா சந்திரனைத் தவிர. மகனையும், மகளையும் சரியான விதத்தில் வளர்க்காததில் அவர் கூட ஒரு விதத்தில் கெட்டவரே.
முந்தைய படங்களில் நாயகர்கள் கெட்டவர்களாக இருந்தாலும் அவர்களிடம் நமக்கு ஒரு பிணைப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த படத்தில் ஜெயம்ரவி ஏற்று நடித்துள்ள இரு கதாபாத்திரங்களிலும் அப்படி எதுவும் ஏற்படவில்லை.
சரி , கதைக்கு வருவோம். பஞ்சம் பிழைப்பதற்காக இந்தியாவை (?) விட்டு, தாய்லாந்து நாட்டுக்கு சென்று மகன் ஜெயம் ரவி, மகளுடன் செட்டிலாகிறார் அம்மா சுதா சந்திரன். போதை மருந்து கடத்தி குறுகிய காலத்திலேயே வாழ்க்கையில் முன்னேறி விடுகிறார் ஜெயம் ரவி. இதனால் மகனை விட்டுப் பிரிகிறார் அம்மா.
ஜெயம் ரவிக்கு பாரில் வேலை பார்க்கும் நீது சந்திரா மீது காதல். நீதுவும் சம்மதிக்க இருவரும் காதலர்களாகிறார்கள். பின்னர், ஜெயம் ரவியை திருமணம் செய்து கொள்வதற்காக மும்பைக்கு அழைத்து வருகிறார் நீது. ஆனால் அவர் அழைத்து வந்தது திருமணம் செய்து கொள்வதற்கு அல்ல, ஜெயம் ரவியை கொலை செய்வதற்குத்தான் என்ற உண்மை ரவிக்குத் தெரிய வருகிறது. அதிலிருந்து ரவி தப்புகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
ஆதி, பகவான் என இரு வேடங்களில் ஜெயம் ரவி. ஆதி மிரட்டலான கேரக்டர். பகவான் கொஞ்சம் ‘மிஸ்’ ஆன கேரக்டர். இரு வேடங்களிலும் ஜெயம் ரவியின் நடிப்பு அட்டகாசம்தான். அதிலும் ஆதி கதாபாத்திரத்தில் ஒரு ‘டான்’ ஆகவே மிளிர்கிறார்.
ஆனால் , பகவான் கதாபாத்திரத்தில் நடிப்பைப் பற்றி குறை சொல்ல முடியாது. ஆனாலும் ‘அப்பு’ பட பிரகாஷ்ராஜை நிறையவே ஞாபகப்படுத்துகிறார். ஒரு வேளை பயிற்சிக்காக அந்த படத்தை நிறைய முறை பார்த்து விட்டார் போலும். அலங்காரம் செய்து கொள்வதும், ‘கேட் வாக்’ நடை நடப்பதும் மட்டும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து விட முடியாது.
நீது சந்திரா, தமிழுக்கு கிடைத்துள்ள இன்னொரு ‘விஜயசாந்தி’. எதையோ இழந்த முக பாவமும், பேச்சில் உள்ள அதிகாரமும் அவருடைய ராணி கதாபாத்திரத்திற்கு நிறையவே உயிரூட்டியிருக்கிறது. ஹீரோ ஜெயம் ரவியுடனே நேருக்கு நேர் ஆக்ஷன் காட்சிகளில் சண்டை போடுவது எதிர்பாராத ஒன்று. இன்றைய ஹீரோக்கள் இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் வைக்க ஒத்துக் கொள்வார்களா என்பது ஆச்சரியம்தான். இந்த படத்தில் இயக்குனர் அமீர் என்பதால் நடந்திருக்கும்.
படத்தில் நிறைய துணை கதாபாத்திரங்கள், அனிருத், பாபு ஆண்டனி, சுதா சந்திரன், மோகன்ராஜ், டார்ஜான், கருணா, ரவிசங்கர் இப்படி நிறைய பேர் நடித்திருக்கிறார்கள்.
யுவனின் இசையில் முன்னாள் ஹீரோயின் சாக்ஷி நடனமாடும் ‘ஐசலாமே….’ பாடல் அதிர வைக்கிறது. பின்னணி இசையில் காட்சிகளின் பலம் இன்னும் கூடுகிறது.
தேவராஜ் ஒளிப்பதிவும், ராஜசேகரின் சண்டைப் பயிற்சியும் குறிப்பிட வேண்டியவை.
அமீரின் ஆதி பகவன் – எந்த படத்திற்கும் எதிர்பார்த்து போகக் கூடாது என்பதை இந்த படம் மீண்டும் நிரூபித்திருக்கிறது.
http://youtu.be/dz8M26SGazg