விஜய் படத்தை இயக்கவுள்ளார் என்று வெளியான செய்திக்கு வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.
‘கோட்’ படத்துக்குப் பிறகு டிவிவி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏனென்றால் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு, விஜய் நடிப்பில் உருவாகும் கடைசி படம் இது.
இந்தப் படத்தின் இயக்குநர்கள் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி, த்ரிவிக்ரம் உள்ளிட்ட பலருடைய பெயர் அடிபட்டது. இறுதியாக ஹெச்.வினோத் தான் இயக்கவுள்ளார் என்பது முடிவாகிவிட்டது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதனால், அவ்வப்போது ‘விஜய் 69’ படத்தின் இயக்குநர் இவர் தான் என்று முன்னணி இயக்குநரின் ஒருவர் பெயர் அடிபடும். அப்படி சமீபத்தில் அடிபட்ட பெயர் வெற்றிமாறன். இது தொடர்பாக விழா ஒன்றில் வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு “அந்தச் செய்தியை நானும் பார்த்தேன். விஜய்யும் பார்த்திருப்பார் என்று நம்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார் வெற்றிமாறன். இதன் மூலம் அவர் இயக்கவில்லை என்பது தெளிவாகிறது.