ஜுலை 15 அன்று ‘சூப்பர் சிங்கர் 6’ இறுதிப் போட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சிக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நாளை மறுநாள் ஜுலை 15ம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

மதியம் 3 மணி முதல் இந்நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

2006ஆம் ஆண்டு ‘தமிழகத்தின் குரல் தேடல்’ என ஆரம்பமான இந்த நிகழ்ச்சி கடந்த பத்தாண்டுகளில் பல புதிய திறமைசாலிகளைத் தந்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் 6வது சீசனில் பல போட்டியாளர்கள், இசைக் கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், ஒவ்வொரு வாரமும் ஒரு தீம் என பல விஷயங்களை இறுதிப் போட்டியாளர்கள் கடந்து வந்திருக்கிறார்கள்.

வரும் 15ம் தேதியன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் அனிருத், மாளவிகா, ஸ்ரீகாந்த், ரக்ஷிதா, செந்தில், ஷக்தி ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள். இவர்களில் ஒருவரை ரசிகர்களும், நடுவர்களும் சேர்ந்து வெற்றியாளராக தேர்ந்தெடுப்பார்கள். இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக அவர்கள் தற்போது தீவிரமான பயிற்சியில் உள்ளார்களாம்.

6வது சீசனின் நடுவர்களான பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், பென்னி தயாள், பாடகிகள் அனுராதா ஸ்ரீராம், சுவேதா மோகன் ஆகியோர் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தனர். இறுதிப் போட்டியிலும் அவர்கள் நடுவர்களாக போட்டியாளர்களை ஊக்கப்படுத்த உள்ளார்கள்.

இறுதிப் போட்டியில் பல சுவாரசியமான இசை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. 40க்கும் மேற்பட்ட நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் ஒன்றாக இணைந்து இசை விருந்தளிக்க உள்ளனர்.

அதோடு இந்த சீசனின் மற்ற சிறந்த போட்டியாளர்கள், சூப்பர் சிங்கர் பிரபலங்கள், நடுவர்கள் என பலரும் இசை விருந்தை வழங்க உள்ளார்கள்.

இறுதிப் போட்டியின் வெற்றியாளர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க நேயர்களும் வாக்களிக்கலாம். Super Singer Vote என கூகுளில் தேடி ஜுலை 15 அன்று நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகி இரண்டாவது சுற்று முடியும் வரை வாக்களிக்க முடியும்.

இறுதிப் போட்டியில் ரசிகர்களாலும், நடுவர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அவர் இசையமைக்கும் படத்தில் பாடும் வாய்ப்பை வழங்க உள்ளார். அது மட்டுமல்ல வெற்றியாளருக்கு பல்வேறு பரிசுகளும் காத்திருக்கின்றன.

Read Previous

விஜய் மில்டன் வெளியிட்ட ‘கருப்பு காக்கா’ முதல் பார்வை

Read Next

ஜுங்கா, ரசித்து ரசித்து செய்த படம் – விஜய் சேதுபதி

Most Popular