’கோட்’ படத்தில் நடனமாட வந்த வாய்ப்பினை நிராகரித்துவிட்டார் ஸ்ரீலீலா
தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவருடைய நடனத்துக்கென்று தனி ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது. ஒவ்வொரு படத்திலுமே இவருடைய வேகமான தனித்துவ நடனம் பெயர் வாங்கி கொடுத்துவிடும். சமீபத்தில் மகேஷ்பாபு உடன் இவர் நடனமாடிய பாடல் இப்போதும் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
தமிழில் நாயகியாக அறிமுகமாக வேண்டும் என்று முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தனது மேலாளர் மூலம் தூது அனுப்பி வருகிறார் ஸ்ரீலீலா. ஆனால், எந்தவொரு படத்திலும் இதுவரை ஒப்பந்தமாக கையெழுத்தாகவில்லை.
இதனிடையே ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் நடனமாட ஸ்ரீலீலாவை அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது, அது உண்மை தான் என்றார்கள். மேலும், அவருடைய தரப்பில் இருந்து மறுத்துவிட்டார்கள்.
ஏனென்றால், ஒரு பாடலுக்கு நடனமாடிவிட்டால் பின்பு தொடர்ச்சியாக ஒரு பாடலுக்கு நடனமாட மட்டும் வாய்ப்பு வர ஆரம்பித்துவிடும். ஆகையால் முதலில் நாயகியாக அறிமுகமாகிவிட்டு பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளார் ஸ்ரீலீலா.
விஜய்யுடன் நடனமாட வந்த வாய்ப்பினை மறுத்துவிட்டாரே என்று இதர நாயகிகள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். அந்த வாய்ப்பினை தான் த்ரிஷா பிடித்து விஜய்யுடன் நடனமாடி இருக்கிறார்.