’2018’ இயக்குநர் இயக்கத்தில் சிம்பு – மோகன்லால்?

‘2018’ இயக்குநர் இயக்கத்தில் சிம்பு மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதனை முடிக்க இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்கிறார்கள். அதனைத் தொடர்ந்து சிறு ஓய்வெடுக்க முடிவு செய்திருக்கிறார் சிம்பு.

அதற்குப் பிறகு எந்தப் படம் தொடங்கும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. ஏனென்றால் தேசிங்கு பெரியசாமி மற்றும் ‘டைனோசர்ஸ்’ இயக்குநர் மாதவன் ஆகியோர் இயக்கவுள்ள படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சிம்பு. இதில் மாதவன் இயக்கும் படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

இதனிடையே, மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்ற ‘2018’ படத்தின் இயக்குநர் ஜுடு ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் சிம்புவுடன் மோகன்லாலும் நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இது தொடர்பாக விசாரித்த போது, “ஜுடு ஆண்டனி ஜோசப் சிம்புவை சந்தித்து கதை கூறியது உண்மை தான். அவரும் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார். மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவில்லை.

இந்தப் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் அல்லது தில் ராஜுவை தயாரிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகே ஒப்பந்தம் கையெழுத்தாகும். இன்னும் பேச்சுவார்த்தை நிலையில் மட்டுமே இந்தப் படம் இருக்கிறது” என்று தெரிவித்தார்கள்.

Read Previous

‘கங்குவா’ 2-ம் பாகம் திட்டங்கள்: ஞானவேல்ராஜா விளக்கம்

Read Next

‘கங்குவா’ தொடங்கப்பட்டதன் பின்னணி: ஞானவேல்ராஜா தகவல்

Most Popular