’கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ மற்றும் ‘மிஷன்’ ஆகிய படங்களின் பொங்கல் ரேஸில் வெற்றியாளர் யார் என்பது தெரிய வந்துள்ளது.
தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’ மற்றும் அருண் விஜய் நடிப்பில் ‘மிஷன்’ ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியானது.
இதில் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் ‘அயலான்’ ஆகிய படங்களுக்கு அதிகப்படியான திரையரங்குகள் கிடைத்தன.
முதலில் திட்டமிட்டப்படி ‘அயலான்’ வெளியாகுமா என்ற குழப்பம் நீடித்ததால், தொடக்கத்தில் டிக்கெட் புக்கிங்கில் டல்லடித்தது. ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு நல்ல ஒப்பனிங் கிடைத்தது.
ஆனால், முதல் வாரம் மட்டுமே ‘கேப்டன் மில்லர்’ வசூல் அற்புதமாக இருந்தது. பின்பு வசூலில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.
அதே வேளையில் ‘அயலான்’ படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது இரண்டாவது வாரத்தின் முடிவில் கூட பெரிதாக கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
முதல் வாரத்தின் ‘அயலான்’ வசூலை விட இரண்டாம் வாரம் வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய வசூல் நிலவரப்படி, ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் சுமார் 35 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. இதில் தயாரிப்பாளருக்கு ஷேர் தொகையாக 16 கோடி வரை கிடைக்கும். ‘அயலான்’ திரைப்படம் சுமார் 40 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது.
இதில் தயாரிப்பாளருக்கு ஷேர் தொகையாக 18 கோடி வரை கிடைக்கும்.
பொங்கலுக்கு வசூலை அள்ளிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த இரண்டு தயாரிப்பாளர்களுக்குமே இந்த வசூல் பெரிய சந்தோஷத்தை அளிக்கவில்லை என்பதே உண்மை.
இந்த வாரம் தெலுங்கில் வெளியாகி என்ன வசூல் செய்யும் என்பது தெரியவரும்.
அதே போல், அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன்’ திரைப்படம் வெளியான நாளன்று கூட்டமே இல்லாமல் இருந்தது. பின்பு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததால், கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி சுமார் 8 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது.
இந்த பொங்கல் வெற்றியாளர் யார் என்று பார்த்தால், பெரிதாக எந்தவொரு படமும் வசூல் செய்யவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.