‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். தொடர்ந்து ‘நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு’ ஆகிய சிறந்த படங்களையும் இயக்கியவர்.
இப்போது ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா’ படங்களை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இந்தப் படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின், விக்ராந்த் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகி, மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
படம் பற்றி இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா கூறுகையில்,
”விக்ராந்த், சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் போது ஒரு திகிலான ‘கிரைம்’ நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நியமிக்கப்படுகிறார். இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. பார்வையாளர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் விதத்தில் விறுவிறுப்பான படமாக இது இருக்கும்,” என்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் ஆரம்பமாக உள்ளது.