‘மோகினி’யில் அதிர வைக்கும் த்ரிஷா

பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் குமார் தயாரிப்பில் மாதேஷ் இயக்கத்தில் விவேக் – மெர்வின் இசையமைப்பில் த்ரிஷா நாயகியாக நடிக்கும் படம் ‘மோகினி’.

வழக்கமான பேய்ப் படமாக இல்லாமல் வித்தியாசமான பேய்ப் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தைப் பற்றி படத்தின் இயக்குனர் மாதேஷ், தயாரிப்பாளர் லட்சுமண் கூறியவை…

“என்னுடய முந்தைய படங்களின் வரிசையில் தற்போது மிகப் பெரிய படைப்பாக உருவாகி உள்ள படம் ‘மோகினி’. இப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் அனைத்து ரசிகர்களிடமும் எளிதாகச் சென்றடையும். மக்கள் எதிர் பார்க்கும் அனைத்துமே இப்படத்தில் உள்ளது.

கிட்டதட்ட 80 சதவீதக் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கபட்டுள்ளன. ஹாரர் பட வரிசையில் மிகவும் மாறுபட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘காதலன்’ படத்தில் ‘முக்காலா முக்காபுலா’ பாடலில் பிரபு தேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று ‘பாகுபலி’ வரை விஷுவல் எபக்ட்ஸ் மக்களை பிரமிக்க வைத்துள்ளது. அதே போன்று இப்படத்திலும் நிறைய விஷவல் எபக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

படத்தில் உள்ள சண்டைக் காட்சிகளில் த்ரிஷா மிகவும் ஈடுபாட்டுடன் நடித்தார். சண்டைக் காட்சிகளில் ‘ரோப்’ வைத்துப் படமாக்கும் போது டூப் எதுவும் வைத்துக் கொள்ளாமல் பல கடினமான காட்சிகளில் நடித்தார்.

ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது. இப்படம் உன்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே உருவாகியுள்ளது. படத்தைப் பார்க்கும் அனைவரும் தங்களோடு இணைத்துக் கொள்ள முடியும். பூர்னிமா பாக்யராஜ், யோகி பாபு, சுவாமிநாதன், ஆர்த்தி கனேஷ் மற்றும் சுரேஷ் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். படத்தில் உள்ள அனைத்துப் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, அதே போன்று படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்கின்றேன்,” என்றார்.

தயாரிப்பாளர் லட்சுமண் குமார் படம் பற்றிக் கூறியதாவது,

“சிங்கம் 2’ படத்திற்குப் பிறகு எங்களது பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வர உள்ள படம் ‘மோகினி’. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு வீட்டினுள் அல்லது ஒரு சிறிய இடத்தினுள் மட்டுமே நகரும் கதைகளம் கிடையாது. இக்கதை லண்டனில் நடக்கும் நிகழ்வை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் 55 நிமிடங்கள் வரும் காட்சிகளில் விஷுவல் எபக்ஸ்ட் காட்சிகள் மிக அருமையாக வந்துள்ளது. த்ரிஷா இப்படத்தின் கதாநாயகியாக உள்ளது மிகப் பெரிய பலம். இப்படத்தின் கதை முழுவதுமே த்ரிஷாவை மையமாக கொண்டே நகரும். படத்தின் கதையை என்னிடம் கூறியதற்கும் இறுதியாக படத்தை பார்க்கும்போது 10 மடங்கு சிறப்பாக வந்துள்ளது,” என்றார்.

பிப்ரவரி மாதத்தில் ‘மோகினி’ வெளியாக உள்ளது.

Read Previous

‘காலா’ டப்பிங்கில் ரஜினிகாந்த்

Read Next

சமுத்திரக்கனி நடிக்கும் ‘சங்கத் தலைவன்’