சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’.
இப்படம் பற்றிய அறிவிப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியானது. அதன் பின் நேற்றுதான் படத்தைப் பற்றிய அடுத்த ‘அப்டேட்’டான படத்தின் நாயகி யார் என்பதை அறிவித்தார்கள்.
‘பில்லா, ஏகன், ஆரம்பம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நயன்தாரா நான்காவது முறையாக அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.
அஜித் படங்கள் என்றாலே அதன் பாடல்களும், அஜித்திற்கான தீம் மியுசிக்கும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்படும். ஆனால், ‘விவேகம்’ படத்தில் அனிருத்தின் இசையில் பாடல்களும் சரி, தீம் மியுசிக்கும் சரி ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. அதனால், ‘விஸ்வாசம்’ படத்திற்கு அவரது இசை அமைந்தால் அது அஜித் ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போய்விடும்.
எனவே, ‘விஸ்வாசம்’ படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜாவை இசையமைக்க வைக்கலாம் என்ற தகவல் ஆரம்பம் முதலே இருந்தது. அதன் பின் அந்தத் தகவலும் மாறியது. மீண்டும் அனிருத் அல்லது, ‘விக்ரம் வேதா’ படத்திற்கு இசையமைத்த சாம் .சி.எஸ் ஆகிய இருவரில் ஒருவர் இசையமைக்கலாம் என்றார்கள். ஆனால், அதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார் என்ற அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான். நாயகி அறிவிப்பை அடுத்து விரைவில் இசையமைப்பாளர் யார் என்பதையும் அறிவித்து அஜித் ரசிகர்களின் ஆர்வத்தை தயாரிப்பு நிறுவனம் பூர்த்தி செய்தால் நல்லது.