‘அஞ்சாதே’ படத்திலிருந்து மிஷ்கினிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் அவருடைய தம்பி ஜி.ஆர். ஆதித்யா.
அண்ணன் மிஷ்கினையே தனது முதல் படமான ‘சவரக்கத்தி’ படத்தில் இயக்கி இயக்குனராக அறிமுகமாகிறார். ராம், பூர்ணா மற்றும் பலர் நடிக்கும் இப்படம் நாளை வெளியாகிறது.
‘சவரக்கத்தி’ படம் பற்றியும், தன் தம்பி இயக்குனர் ஆதித்யா பற்றியும் மிஷ்கின் கூறியதாவது,
“நான் என் வாழ்கையில் பார்த்த இரண்டு ‘பார்பர்ஸ்’ எனக்கு மிகவும் பிடித்தவர்கள். அவர்ளைப் பற்றி ஒரு கதை எழுத வேண்டுமென்று நினைத்தேன். அதுதான் ‘சவரக்கத்தி’. எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை அது.
இப்படத்தில் ராம் ‘பிச்சை மூர்த்தி’ என்ற கேரக்டரில் நடித்துள்ளார். பொய்யையே கட்டிப் பிடித்துக் கொண்டு வாழ்கின்ற ஒரு பார்பர் கதாபாத்திரம் அவருக்கு. நான் ‘மங்கா’ என்ற கேரக்டரில் கோபத்தைக் கட்டிப் பிடித்து வாழ்கின்ற ஒரு ரவடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் ராம் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் நான் மங்கா கேரக்டரில் நடித்துள்ளேன்.
நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சி. அதற்குப் பின்பு நடைபெறும் சம்பவங்களின் அடிப்படையில் படத்தின் கதை இருக்கும். ஒரு நாளில் நிகழும் கதைதான் இந்த ‘சவரக்கத்தி’.
‘சுபத்ரா’ என்ற கேரக்டரில் பூர்ணா ராமின் மனைவியாக காது கேட்காத, 2 கைக் குழந்தைகளுடன் 9 மாத கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார்.
பொய்யையும், ரவடித் தனத்தையும் கொண்டு வாழும் எங்கள் இருவருக்கும், தனக்குப் பிறக்கும் குழந்தையுடன், பாடம் கற்பிக்கிறது ‘சுபத்ரா’ கதாபாத்திரம். பிறக்கும் குழந்தையுடன், நாங்களும் எப்படி புது மனிதர்களாகப் பிறக்கின்றோம் என்ற கதையை கொண்டது தான் சவரக்கத்தி.
இப்படத்தில் இரண்டு டைரக்டர்கள் நடித்தாலும் ஆதித்யா மிகவும் சிறப்பாக டைரக்ட் செய்துள்ளார். இப்படத்தின் தலைப்பு ‘சவரக்கத்தி’. ராம் கையிலும் கத்தி இருக்கும் என் கையிலும் கத்தி இருக்கும்.
“கத்தி எதுக்குதான் தொப்புள் கொடி வெட்டத்தான்” என்பதை இந்தப் படம் சொல்கிறது.
ஒரு க்ரைம் திரில்லர் போன்று விரைவான கதையம்சம் கொண்ட படம் ‘சவரக்கத்தி’, என்கிறார் மிஷ்கின்.