தமிழ்த் திரையுலகத்தில் இப்போதுள்ள இளம் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் டி. இமான்.
விஜய் நடித்து வெளிவந்த ‘தமிழன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். 100 படங்களக்கும் மேல் இசையமைத்து பல இனிமையான பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இருந்தாலும், இதுவரை அஜித் நடித்த ஒரு படத்திற்கு அவர் இசையமைத்ததே இல்லை. அந்த குறை ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் தீர்ந்திருக்கிறது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க உள்ள ‘விஸ்வாசம்’ படத்திற்கு இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
யுவன்ஷங்கர் ராஜா, அனிருத், சாம் சி.எஸ். ஆகியோரில் ஒருவர் இசையமைக்கலாம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அந்த வாய்ப்பு இமானுக்குப் போயுள்ளது.
விஸ்வாசம் படத்திற்கு இசையமைப்பது குறித்து இமான் கூறுகையில்,
“இத்தனை வருடங்களில் எல்லோரிடம் இருந்தும் ‘தல’ படத்திற்கு எப்போது இசையைமப்பீர்கள் என்ற பொதுவான கேள்வி வரும். இப்போது அதற்குப் பதில், ‘விஸ்வாசம்’ படத்தின் இசையமைக்கப் போகிறேன் நண்பர்களே. உங்கள் ஆசியுடன் சிறந்ததைக் கொடுப்பேன். சிவா சார், சத்யஜோதி பிலிம்ஸ் ஆகியோருக்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.