விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடரான ‘ராஜா ராணி’யில் நாயகனாக நடிக்கும் சஞ்சீவ் நாயகனாக நடித்து 2009ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘குளிர் 100 டிகிரி’.
அப்படத்தை இயக்கிய அனிதா உதீப் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராகக் களம் இறங்குகிறார். ஓவியா நாயகியாக நடிக்கும் அப்படத்திற்கு ‘90 ml’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தின் முதல் பார்வை நேற்று வெளியானது.
90 எம்எல் எனப் பெயர் வைத்திருந்தாலும் டாஸ்மாக் கடையில் அமர்ந்து கொண்டு சரக்கடிக்கும் நாயகியின் போஸ்டரை முதல் பார்வையாக வெளியிடாமல், ஒரு டீக்கடையில் அமர்ந்து கொண்டு டீ குடிக்கும் ஓவியாவின் முதல் பார்வையை நேற்று வெளியிட்டுள்ளார்கள்.
இப்படத்தின் முக்கியச் செய்தி, படத்திற்கு இசையமைப்பது சிம்பு. ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்குப் பிறகு சிம்பு இசையமைக்கும் இரண்டாவது படம் இது.
சமீப காலமாக சிம்பு, ஓவியா நெருக்கமான நண்பர்களாக மாறியிருக்கிறார்கள். சிம்பு இசையில் ஓவியா பாடிய பாடல் ஒன்றும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இப்போது ஓவியாவின் படத்திற்கும் சிம்பு இசையமைக்க சம்மதித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு புகழின் வெளிச்சத்தில் வந்த ஓவியா தற்போது ‘காஞ்சனா 3, கே 2, சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
‘90 ml’ படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது.