இந்தியத் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய திடீர் மரணம் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப உறவினர் ஒருவரது திருமணத்தில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோருடன் அவர் துபாய் சென்றிருந்தார். அங்கு திடீரென வந்த மாரடைப்பில் அவர் மரணம் அடைந்துவிட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி.
1969ம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘துணைவன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பாலசந்தர் இயக்கிய ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து நம்பர் 1 நடிகையாகத் திகழ்ந்தார்.
ஹிந்தியில் 1975ம் ஆண்டு வெளிவந்த ‘ஜுலி’ படத்தில் அறிமுகமானாலும், 1983ம் ஆண்டு வெளிவந்த ‘மூன்றாம் பிறை’ படத்தின் ரீமேக்கான ‘சத்மா’ படம் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தந்தது.
அதன் பின் ஹிந்தியில் பல வெற்றிப் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர் 1 நடிகையாக உயர்ந்தார். தென்னிந்தியாவில் இருந்து ஹிந்திக்குச் சென்ற ஒரு நடிகை இந்தியத் திரையுலகின் கனவுக் கன்னியாகவும் மாறினார்.
தயாரிப்பாளர் போனி கபூரைத் திருமணம் செய்து கொண்டவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
திருமணத்திற்குப் பின் பல வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படம் மூலம் மீண்டும் நடிக்கக் களம் இறங்கினார். கடந்த ஆண்டு ‘மாம்’ படத்திலும் நடித்தார்.
அவருடைய மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போதுதான் ஹிந்திப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தன் மகளைப் பெரிய நாயகியாக்கிப் பார்க்க வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டார். ஆனால், மகள் நடிக்கும் முதல் படம் நடித்து வெளிவருவதற்குள்ளாகவே ஸ்ரீதேவி மறைந்துவிட்டார்.
அவருடைய மறைவுக்கு இந்தியத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
I’m shocked and very disturbed. I’ve lost a dear friend and the industry has lost a true legend. My heart goes out to her family and friends. I feel the pain with them #RIPSridev … you will be missed.
— Rajinikanth (@rajinikanth) February 25, 2018
மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்
— Kamal Haasan (@ikamalhaasan) February 25, 2018
நடிகை ஸ்ரீதேவியின் முக்கிய தமிழ்ப் படங்கள்… – http://tamilmoviesdatabase.com/celebrity/sri-devi/