உறவினர் அனிருத்துக்கு ரஜினிகாந்த் கொடுத்த வாய்ப்பு

ரஜினிகாந்த் படம் என்றாலே அந்தப் படத்தைப் பற்றித் தீர்மானிக்கும் அனைத்து விஷயங்களையும் ரஜினிகாந்த் தான் பார்ப்பார்.

படத்தில் இடம் பெறும் கலைஞர்கள் பற்றி ரஜினிகாந்த் அனுமதி இல்லாமல் படத்தை இயக்கும் இயக்குனர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டார்கள்.

‘2.0, காலா’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த், அந்தப் படங்கள் வெளிவருவதற்கு முன்பாகவே அடுத்த படத்தில் நடிக்க சம்மதித்து, அதற்கான அறிவிப்பும் வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கப் போகும் அந்தப் படத்தின் மற்ற விவரங்கள் அறிவிக்கப்படாமலே இருந்தது.

இன்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ரஜினிகாந்தும், அனிருத்தும் உறவினர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அனிருத்தை ‘3’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய தனுஷ், தொடர்ந்து அவருக்கு பல நல்ல வாய்ப்புகளைக் கொடுத்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அனிருத், தனுஷுக்குப் பிடிக்காத சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தார். அதனால், இருவரும் பிரிந்ததாகச் சொல்லப்படுகிறது.

தனுஷ் இயக்குனராக அறிமுகமான ‘ப பாண்டி’ படத்தில் கூட ஷான் ரோல்டான்தான் இசையமைப்பாளராகப் பணி புரிந்தார். அடுத்து ‘மாரி 2’ படத்திலாவது அனிருத், தனுஷ் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், அதுவும் நடக்கவில்லை. தனுஷ் தயாரிக்கும் ‘காலா’ படத்திற்கும் அனிருத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருவருக்குமான பிரிவு ஏறக்குறைய நிரந்தரமாகவே இருக்கிறது.

இதனால், வருத்தமடைந்த அனிருத் குடும்பத்தினர் ரஜினிகாந்த்திடம் அது பற்றி பேசியிருக்கலாம் என்றும், அதனால்தான் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராக நியமிக்க ரஜினிகாந்த் சிபாரிசு செய்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். ஆனால், ‘கபாலி, காலா’ ஆகிய படங்களில் அவர் அடுத்தடுத்து பணி புரிந்ததால் தற்போது அவரது இடத்தை அனிருத் கைப்பற்றியிருக்கிறார்.

ரஜினி படத்திற்கு இசையமைக்க உள்ளது பற்றி அனிருத் கூறுகையில்,

“கனவு நிஜமானது. தலைவர் படத்திற்கு இசையமைப்பதும், என்னுடைய அபிமான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இணையப் போவதும் மகிழ்ச்சியாகவும், வானத்தில் பறப்பது போன்றும் இருக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

Read Previous

பலத்த எதிர்ப்பு, ‘ஸ்தாபகம்’ வார்த்தையை நீக்கிய கமல்ஹாசன்

Read Next

விஜய் டிவியில் ‘நினைக்கத் தெரிந்த மனமே’ தொடர்