தமிழில்தான் பேசுவேன், விஜய் தேவரகொன்டா உறுதி

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படம் ‘நோட்டா’.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டது. படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா. இரஞ்சித், ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியவர்களுடன் பிரபல விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா,

‘பெல்லி சூப்புலு’ படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் என்னிடம் தமிழில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான் தான் மறுத்தேன். ‘அர்ஜுன் ரெட்டி’ வெளியான பிறகும் என்னைத் தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது எனக்குப் பொருத்தமான கதை அமைந்தால் நடிக்கிறேன் என்று சொன்னேன்.

இயக்குநர் ஆனந்த், என்னை சந்தித்து இந்தப் படத்தின் கதையைச் சொன்னார். தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திரைக்கதையை கவனித்து கேட்க முடியவில்லை. பிறகு அவரிடம் இந்தக் கதையை வேறு ஒரு சமயத்தில் கேட்கிறேன் என்று சொன்னேன். பிறகு சற்று ஒய்வு கிடைத்தவுடன் இந்தக் கதையை முழுமையாக கேட்டேன், அற்புதமாக இருந்தது. எனக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்த சமயத்தில் உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்த படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். அதற்குள் நான் தமிழை கற்றுக் கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில்தான் பார்ப்பீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்,’என்றார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் ஆரம்பமாகிறது.

Read Previous

‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில் சிம்பு

Read Next

‘நாடோடிகள் 2’, படப்பிடிப்பு மதுரையில் ஆரம்பம்