தமிழ்த் திரையுலகத்தில் டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் அதிகப்படியான கட்டணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடந்த மாதம் முதல் புதிய படங்களை வெளியிடாமல் இருந்தது.
நேற்று அரசு சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அது தொடர்பாக முடிவு எட்டப்பட்டது.
இதையடுத்து இன்று திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு பத்திரிகையாளர்களை சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது பேசிய தலைவர் விஷால்,
“நாளை மறுநாள் வெள்ளிக் கிழமை முதல் புதிய படங்கள் வெளியாகும். முதல் படமாக ‘மெர்க்குரி’ படம் வெளியாகிறது. படப்பிடிப்புகளும் அன்றைய தினத்திலிருந்து நடைபெறும்.
பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதற்கு தமிழக முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
‘காலா’ படம் எப்போது வெளிவரும் என்பதை அப்படத்தின் தயாரிப்பாளர்கள்தான் அறிவிக்க வேண்டும். எங்களது கோரிக்கையை ஏற்று பட வெளியீட்டை அவர்கள் தள்ளி வைத்தார்கள்.
இனி புதிய படங்களை வெளியிட ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. அந்த குழுவினர் பட வெளியீடுகளை ஒழுங்குபடுத்துவார்கள். அடுத்த வருடம் மார்ச் 30ம் தேதி வரை எந்தெந்த படங்களை வெளியிடுவோம் என்பதை இப்போதே முடிவு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
இ-சினிமா பிரச்சினைக்கு இப்போது தீர்பு ஏற்பட்டுள்ளது. டி சினிமா பிரச்சினையை அடுத்து பேச உள்ளோம். அடுத்து நடிகர் சங்க நிர்வாகிகளுடன் பேச உள்ளோம். தமிழ் சினிமாவை பல விதங்களில் மாற்ற முயற்சிகள் எடுத்து வருகிறோம்.