‘நடிகையர் திலகம்‘ என் முதல் குழந்தை – கீர்த்தி சுரேஷ்

வைஜெயந்தி மூவீஸ், ஸ்வப்னா சினிமா தயாரிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் மிக்கி ஜே மேயர் இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா, பிரகாஷ் ராஜ், மோகன்பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘நடிகையர் திலகம்’.

மறைந்த பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் அஷ்வின், நடிகை கீர்த்தி சுரேஷ், பாடலாசிரியர் மதன் கார்க்கி, படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பேசும் போது ‘நடிகையர் திலகம்’ படம் தன்னுடைய முதல் குழந்தை என்றார்.

“இந்தப் படம் வாய்ப்பு என்னைத் தேடி வந்த போது உடனே நான் சம்மதிக்கவில்லை. வளர்ந்து வரும் நேரத்தில் இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அதையும் மீறி, அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி பலருக்கும் தெரியும். அதையெல்லாம் நடித்துக் காட்டும் போது பிரச்சினை வருமா என்றும் சந்தேகம் இருந்தது. ஆனால், இயக்குனர் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்துதான் எடுக்கப் போகிறோம் என்று சொல்லி நடிக்க வைத்தார்.

‘தொடரி’ படத்தில் நான் நடித்ததைப் பார்த்துதான் இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்தாக இயக்குனர் நாக் அஷ்வின் சொன்னார். ‘தொடரி’ படத்தில் நடிக்கும் போது அந்தப் படம் எனக்கு ஏதாவது நல்லது செய்யும் என்று எதிர்பார்த்தேன். படம் வெளிவந்த பின் பலர் கிண்டல் செய்தார்கள், பலர் பாராட்டினார்கள். ஆனால், ‘தொடரி’ மூலம்தான் ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

நாக் அஷ்வினோட இரண்டாவது படம் இது. சாவித்ரி அம்மா வாழ்க்கை வரலாற்றை அவர் எப்படி எடுப்பார் என சந்தேகம் வரலையா எனக் கேட்டார்கள். அதைப் படமாக எடுக்க வேண்டும் என அவர் நினைத்ததே பெரிய விஷயம். இந்தப் படத்திற்காக மூணு மணி நேரம் என்னிடம் கதை சொன்னார். அப்போதே இப்படம் பற்றிய நம்பிக்கை எனக்கு வந்தது.

படத்தில் நிறைய கட்டங்கள் இருக்கிறது. முதலில் சின்ன பெண்ணாக, அப்புறம் வளர்ந்த வயது, அப்புறம் குண்டா இருக்கிற மாதிரி, கடைசியில் ஒல்லியா, டல்லா இருக்கிற மாதிரியான கதாபாத்திரங்கள். இவற்றையெல்லாம் காமிராமேன் டானி அருமையா காட்டினாரு.

படத்தில் எனக்கு மட்டுமே 120 காஸ்ட்டியூம்ஸ் இருக்கு. தயாரிப்பாளர், இயக்குனர் அம்மாவின் பழைய புடவைகளைக் கூட பயன்படுத்தியிருக்கிறோம். சாவித்ரி அம்மா என்ன மாதிரியான நகைகள் அணிந்திருந்தார்களோ, அது போலவே நகைகள் உருவாக்கி அணிந்து நடித்தோம்.

ஒவ்வொரு நாளும் என்ன மாதிரியான ரெபரென்ஸ் எனக் கேட்டு அந்தப் புகைப்படங்களைப் பார்த்து அதன்படியே தோற்றத்தை மாற்றி நடித்தேன். ஆர்ட் வேலைகள் அனைத்தும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. என்னோட மேக்கப் டீம் எனக்காக கடுமையாக உழைத்தார்கள். சாவித்ரி அம்மா மாதிரி மாறுவதற்கு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார்கள். கண், உதடு, புருவம், ஹேர் ஸ்டைல் என தனித் தனியாக கவனம் செலுத்தி தினமும் இரண்டரை மணி நேரம் செலவழித்து தோற்றத்தைக் கொண்டு வந்தோம்.

இந்தப் படத்திற்காக நான் குண்டாகவில்லை, அதற்காக நான்கு மணி நேரம் புராஸ்தடிக் மேக்கப் போட்டு நடித்தேன். சரியாக சாப்பிடக் கூட முடியாது, வாயைத் திறக்கக் கூட முடியாது, அந்த சமயத்தில் ஏழு மணி நேரம் வரை கூட நடித்திருக்கிறேன்.

இதையெல்லாம் தாண்டி இதுவரை வந்த பயோபிக் படங்களை விட இந்தப் படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

சாவித்ரி அம்மா திரையில் எப்படி இருப்பார்கள் என்று தெரியும். ஆனால், திரைக்குப் பின்னார் அவர் எப்படி இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. அது பற்றிய விவரங்களை அவருடைய மகள் விஜய சாமுண்டீஸ்வரி தெரிவித்தார். இந்தப் படத்தில் எனக்கு சேலஞ்சிங்கான விஷயமாக இருந்தது அதுதான். இந்தப் படம் என்னுடைய முதல் குழந்தை எனப் பெருமையாகச் சொல்வேன்,” என்றார் கீர்த்தி சுரேஷ்.

Read Previous

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ஆபாசப் படமா ?

Read Next

விமல், வடிவேலு இணைந்து நடிக்கும் முதல் படம்