ஜெயா டிவியின் ‘தாய் மண்ணே வணக்கம்’ – ஏஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி

     ஜெயா டிவி வழங்க, ‘தாய் மண்ணே வணக்கம்’ என்ற மாபெரும் இசைப் பெருவிழா நிகழ்சசியை ஏ.ஆர். ரகுமான் இம்மாதம் டிசம்பர் 29ம் தேதி சென்னை, நந்தனம், ஒய்எம்சிஏ மைனதானத்தில் நடத்த இருக்கிறார்.

இந்த இசை நிகழ்ச்சி குறித்து, ஜெயா டிவி வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில், “இந்திய வரலாற்றில் இசைக்கான ஆஸ்கர் விருது பெற்ற பின் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தொலைக்காட்சிகளுக்காக நடத்தும் முதல் நிகழ்ச்சி இது.

சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு குறிஞ்சி மலராய் சென்னையில் பூக்கும் இசைப் புயலின் பிரம்மாண்டமான நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சியில் உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியியில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே இடம் பெறுவது கூடுதல் சிறப்பாகும்.

‘ரோஜா’வில் தொடங்கி ‘கடல்’ வரை வெற்றி முரசு கொட்டிய பாடல்களின் தொகுப்பு நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.

ஐந்து பெண் இசைக் கலைஞர்கள் உட்பட பல வெளிநாட்டு இசை வல்லுனர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று இசைக் கருவிகளை இயக்கப் போகிறார்கள். ஐந்நூறுக்கும் மேற்பட்ட அமைப்பாளர்களின் அயராத உழைப்பில் உருவாகும் மேடையில் நூற்றுக்கணக்கான இசை வல்லுநர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பிக்க இருக்கிறார்கள்.

25,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து ரசிக்கும் வண்ணம் இசை மேடையும் மைதானமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை மூலம் வரும் வருவாயில் 10 விழுக்காட்டினை, மனித நேயத்துடன் பல சமூக சேவைகளை சிறப்பாக செய்து வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க ஜெயா தொலைக்காட்சி குழுமம் திட்டமிட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்”.

இந்த விழாவில் ஏறக்குறைய 30 பாடல்களுக்கு மேல் பாட இருக்கிறார்கள். ஏ.ஆர். ரகுமான் நான்கைந்து பாடல்களைப் பாட இருக்கிறார். எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஹரிஹரன் உள்ளிட்ட பல பாடகர், பாடகிகள் கலந்து கொண்டு பாட இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சி பற்றி ஏஆர். ரகுமான் கூறுகையில்,“ ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில், முழுக்க முழுக்க தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும் என்ற எனது ஆசை இதன் மூலம் நிறைவேறப் போகிறது.

எந்தெந்த பாடல்களை பாட வேண்டும் என்ற ஆலோசனை போய்க் கொண்டிருக்கிறது. முதல் பாடலாக எந்த பாடலை பாட வேண்டும் என்பது ஒரு மிகப் பெரிய சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளோம். இளைய தலைமுறை பாடகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள், அனைவரும் ரசிக்கும்படியான ஒரு இசை நிகழ்ச்சியாக அமையும்,” என்று தெரிவித்தார்.

Read Previous

மீண்டும் தமிழில்..அதுவும் அஜித்துடன்…

Read Next

மீண்டும் ‘ஆஸ்கர்’ வாங்க ஆசை இல்லை- ஏ.ஆர். ரகுமான்