ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சன் ரைசர்ஸ் அணி இழந்தது.
நேற்று டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ‘எலிமினேட்டர்’ போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன் ரைசர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த போட்டி ‘எலிமினேட்டர்’ போட்டி என்பதால் இதில் தோற்கும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். எனவே, சன் ரைசர்ஸ் அணி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டது.
அதே சமயம், இந்த போட்டியில் வெற்றி பெற்றதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இறுதிப் போட்டியில் விளையாட மேலும் ஒரு வாய்ப்பாக ‘குவாலிஃபையர் 2’ போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாளை , கொல்கத்தாவில் நடைபெறும் ‘குவாலிஃபையர் 2’ போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வரும் ஞாயிறு அன்று எதிர்த்து விளையாடும்.
நேற்று , டாஸ் வென்ற சன் ரைசரஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. ஆரம்பத்திலேயே அந்த அணிக்கு ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் விக்ரம்ஜித் மாலிக் அதிர்ச்சியளித்தார். முதல் ஓவரின் கடைசி பந்தில் பார்த்திப் பட்டேலின் விக்கெட்டை வீழ்த்திய அவர், அடுத்து வீசிய ஓவரில் விஹாரியை அவுட்டாக்கினார்.
3வது ஓவரிலேயே 3 ரன்களுக்கு, 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய து சன் ரைசர்ஸ் அணி. பின்னர் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் கேமரூன் ஒயிட், ஷிகர் தவான் ஜோடி நிதானமாக ஆடி 83 ரன்கள் வரை சேர்த்த நிலையில் 16வது ஓவரில் கேமரூன் ஒயிட் அவுட் ஆனார்.
அதன் பின் வந்த டேரன் சமி அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 3 சிக்சர் உட்பட 29 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். கடைசியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 132 ரன்களை எடுத்தது.
அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணியும் தடுமாற்றத்துடனேயே தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. ஸ்கோர் 13 ஆக இருந்த போது இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் அணியின் கேப்டன் ராகுல் திராவிட் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஷேன் வாட்சன் கொஞ்சம் அதிரடி காட்டிய நிலையில் 24 ரன்கள் இருந்த போது சிக்சர் அடிக்க முயன்று அவுட் ஆனார். அதன் பின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தன. 57 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது ராஜஸ்தான் அணி.
6வது விக்கெட்டுக்கு சாம்சனுடன் ஜோடி சேர்ந்தத பிராட் ஹாட்ஜ் அதிரடியாக ஆடினார். ஸ்கோர் 102 ஆக இருந்த போது ஸ்டெயின் பந்து வீச்சில் சாம்சன் அவுட் ஆனார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த பிராட் ஹாட்ஜ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டேரன் சாமி பந்து வீச வந்தார். முதல் இரண்டு பந்துகளை அடுத்தடுத்து சிக்சருக்கு அனுப்பிய பிராட் ஹாட்ஜ், ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார். 29 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 54 ரன்கள் எடுத்த அவர் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
இந்த தோல்வியால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து சன் ரைசர்ஸ் அணி வெளியேற்றப்பட்டது.
இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுடன் ‘சாம்பியன்ஸ் லீக்’ போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றது.
