‘கோச்சடையான்’ படத்தைப் பற்றி கடந்த சில நாட்களாக தேவையற்ற வதந்திகள் வந்து கொண்டிருந்தன. அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் பத்திரிகைப் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
“கோச்சடையான்’ படம் தமிழ்த் திரையுலகில் ஒரு மிகப் பெரிய முயற்சி. இந்த படத்தை அனைத்து தரப்பு மக்களும் பார்த்து நிச்சயம் பாராட்டுவார்கள்.
இளமையான தோற்றத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் பல சாகசங்கள் புரிந்திருக்கிறார். படத்தைப் பார்த்து விட்டு அவரே அசந்து விட்டார்.
படத்துக்கு இயக்கம் மேற்பார்வை பணி செய்த கே.எஸ்.ரவிக்குமாரும், “படமே பார்க்காதவர்கள் கூட இந்த படத்தை இரண்டு, மூன்று முறை பார்ப்பார்கள், ” என கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா மிகத் திறமையாக, ஒரு சவாலுடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
“அவதார், டின் டின்,” போன்ற ஹாலிவுட் படங்கள் எல்லாம் தலா 2000 கோடி ரூபாய் செலவில் நான்கு வருடங்கள் தயாரான படங்கள். ஆனால், ‘கோச்சடையான்’ 125 கோடி ரூபாய் செலவில், இரண்டு வருடங்களில் தயாரான படம்.
“போட்டோ ரியலிஸ்டிக் பெர்ஃபாமன்ஸ் கேப்சரிங்’ என்ற தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகியுள்ளது. ரஜினிகாந்த், தந்தை – மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள், நவீன தொழில் நுட்பங்கள் அதிகம் இடம் பெற்றிருப்பதால்தான் வெளியீடு தாமதமாகிறது. படப்பிடிப்பு, எடிட்டிங் பணிகள் முடிவடைந்து விட்டன.
பின்னணி இசை சேர்ப்பு பணிகள், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவையனைத்தும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிந்து விடும்.
அக்டோபர் மாதம் படம் எப்போது வெளியாகும் என்று முறைப்படி அறிவிக்கப்படும், ” என்று அவர் தெரிவித்துள்ளார்.