ஒரு படத்தின் தலைப்பை குழப்புவதற்காக அதே பாணியில் டைட்டிலை வைத்து 15 லட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்ததாக வேறு ஒரு படத்தின் தயாரிப்பளரை எச்சரித்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.
விஜய் வசந்த், மகிமா, பிரபு, ரகுமான் மற்றும் பலர் நடிக்க ராஜபாண்டி இயக்கத்தில் பிரேம்ஜி இசையமைத்துள்ள ‘என்னமோ நடக்குது’ படத்தின் இசை வெளியீடு இன்று காலை நடைபெற்றது.
விழாவில் பேசிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பேசும் போது,
“என்னமோ நடக்குது’ என்று இவர்கள் 10 கோடி ரூபாய் செலவு செய்து படத்தைத் தயாரித்திருக்க, ‘அந்த வீட்ல என்னமோ நடக்குது’ என்ற பெயரில் ஒரு படத்தை வேறு ஒரு அமைப்பில் பதிவு செய்து விட்டு படத்தை வெளியிட தயாராக இருந்தார்கள்.
‘என்னமோ நடக்குது’ படத்தின் தயாரிப்பாளர் வினோத் என்னை அணுகி இந்த பிரச்சனையை கவனத்திற்கு கொண்டு வந்தார். ‘அந்த வீட்ல என்னமோ நடக்குது’ என்ற படத்தின் தயாரிப்பாளர்கள் அவர்களது வெளியீட்டை தள்ளி வைத்துக் கொள்வதாகவும், அதற்காக ‘என்னமோ நடக்குது’ தயாரிப்பாளரிடமிருந்து 15 லட்ச ரூபாய் வரையும் பணம் கேட்டார்கள்.
இது ஏறக்குறைய பிளாக் மெயில்தான். இவர்களும் அப்பணத்தைக் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால், நான்தான் அதைத் தடுத்து, இது தவறான முன்னுதாரணமாகி விடும். அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்றேன்.
கடைசியில் அவர்கள் ஏழரை லட்ச ரூபாயாவது கொடுங்கள் என இறங்கி வந்தார்கள். நான் முடியவே முடியாது, ‘என்னமோ நடக்குது’ படத்தை அவர்கள் தள்ளி ரிலீஸ் செய்வதாக சொல்லி விட்டார்கள், நீங்கள் திட்டமிட்டபடியே ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்றேன்.
வேறு ஒரு அமைப்பில் இப்படி ஏட்டிக்குப் போட்டியாக தலைப்வை பதிவு செய்து கொண்டு இப்படி மிரட்டி வருவது சரியல்ல. அந்த அமைப்பிற்கு நான் எச்சரிக்கையாகவும் சொல்லி விடுகிறேன்.
அதே போல ‘இவன் வேற மாதிரி’ படத்திற்குப் போட்டியாக ‘இவள் வேற மாதிரி’ என்ற தலைப்பை வைத்து ஒரு மோசமான படத்தை வெளியிட தயாராக இருந்தார்கள்.
இப்படி தயாரிப்பாளர்களே மற்றொரு தயாரிப்பாளர்களை மிரட்ட ஆரம்பித்தால் அவர்களுக்கு இனி எந்த ஒத்துழைப்பும் கொடுக்கப் போவதில்லை என முடிவெடுக்க இருக்கிறோம்,” என்றார்.
முன்னதாகப் பேசிய இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், வரும் 1ம் தேதி முதல் திரையுலகில் அனைத்து சங்கங்களும் கலந்து பேசி பல மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறோம்,” என்றார்.
அந்த மாற்றத்தில் இந்த தலைப்புப் பிரச்சனைக்கும் ஒரு நிரந்தரத் தீர்வு கொண்டு வந்து விடுங்கள்.
இனி, இம்மாதிரி ஒரு பிரச்சனை வரவே கூடாது…