யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், கோகுலகிருஷ்ணா இயக்கத்தில், தரண் இசையமைப்பில் நானி, புதுமுகம் வாணி கபூர் நடிக்கும் ‘ஆஹா கல்யாணம்’ படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நாயகன் நானியை, விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தி வைத்தார். நாயகி வாணி கபூரை , சிம்ரன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அப்போது வாணி கபூருக்கு ஏதாவது ஒரு பட்டத்தை வழங்குமாறு சிம்ரனிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டார். அப்படியென்றால் என்ன என்று புரியாமல் தவித்த வாணி கபூரிடம், பட்டப் பெயரின் மகத்துவத்தை சொல்லி விளக்கினார் சிம்ரன்.
அப்படியென்றால் தன்னை ‘மொளகா பஜ்ஜி’ வாணி கபூர் என அழைத்தால் மகிழ்வேன் என வாணி கபூர் சொன்னார். அதன் மீது அப்படி என்ன ஆசையோ தெரியவில்லை வாணிக்கு. ஒரு வேளை படம் வந்த பின் புரியுமோ என்னமோ…
படத்தின் தலைப்புக்கேற்ப இந்த விழாவே ஒரு திருமணம் போலவே கோலாகாலமாக நடை பெற்றது. அரங்கம் ஒரு திருமண மேடை போலவே அமைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி படக்குழுவினர் அனைவரும் சம்பிரதாயமான வேட்டி , சட்டை , பட்டு புடவை என விழாவுக்கான உடையில் வந்தோரை வரவேற்றது எல்லோரையும் கவர்ந்தது .
விழாவில் இயக்குனர்கள் விஷ்ணுவர்தன், தரணி, சமுத்திரக்கனி, பிரபல பின்னணிப் பாடகி உஷா உதுப் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அடுத்த மாதம் திரைக்கு வருகிறது ‘ஆஹா கல்யாணம்’.