யார் யாரோ விமர்சனம் எழுதுறாங்க – ஒரு ஒளிப்பதிவாளரின் எரிச்சல்…

vijay amstrong

எந்த திரைப்பட விழாவாக இருந்தாலும், யாராவது பரபரப்பாகப் பேசினால் அதை பத்திரிகைகளிலும், இணைதளங்களிலும் கண்டிப்பா செய்தியாக போடுவார்கள் என்ற எண்ணத்தில் பரபரப்பு என்று நினைத்து எதையாவது பேசுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.

சமீப காலமாக, படங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களைப் பற்றி பலரும் பேசி வருகிறார்கள்.

அறிவியல் வளர்ச்சியால் வளர்ந்து வரும் இணையதளத்தின் பயனாக “பிளாக், ஃபேஸ் புக், ட்விட்டர்” போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் படங்களைப் பற்றி விமர்சனம் எழுதியும், காரசாரமான, கிண்டலான கமென்ட் போட்டும் வருகிறார்கள்.

அதே சமயம் அவர்கள் நல்ல படங்களை வரவேற்கவும் தவறவில்லை. அப்படி சமீபத்தில் அனைவரும் வரவேற்றுப் பாராட்டிய படம் ‘கோலி சோடா’. இந்த படத்தின் வெற்றியே ‘ஆன் லைன்’ மூலம்தான் கிடைத்தது என அப்படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

ஆனால், விஜய் ஆம்ஸ்ட்ராங் என்ற ஒளிப்பதிவாளர் இப்படி விமர்சனம் எழுதுபவர்களைப் பார்த்தும், சமீபத்தில் படமெடுக்க வருபவர்களைப் பார்த்தும் எரிச்சல் அடைந்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ‘தொட்டால் தொடரும்’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசும் போது,

“சமூக வலைத்தளங்களில் சினிமா பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் விமர்சனம் எழுதுகிறார்கள். அதனால் திரையுலகினர் எரிச்சல் அடைவதுண்டு. 

இன்று டிஜிட்டல் மயமாகி விட்டதால் நிறைய படங்கள் வருகின்றன. தரம்பற்றிக் கவலைப் படாமல் வருகின்றன. இது ஆபத்தான போக்கு.

இன்று பெரிய நட்சத்திரங்கள்,  பெரிய நிறுவனப் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்கள் கிடைக்கின்றன. சிறிய படங்களுக்கு சிறு முதலீட்டுப் படங்களுக்குக் கிடைப்பதில்லை.

குறைந்த பட்ஜெட்டில் தரமான படம் எடுக்க முடியுமா? என்கிறார்கள். முடியும்.

கிடைக்கிறதை வைத்து படமெடுக்கிற சூழல் இங்கு இருக்கிறது.செலவும் தொழில்நுட்பமும் எளிமையாக்கப்பட்டு விட்டதால் எடுக்கிற படமெல்லாம் படமாகிவிட முடியாது.

எளிமையும் தொழில்நுட்பமும் மட்டுமே ஒரு படத்தை எடுக்க காரணமாகிவிட முடியாது. அது மோசமான படங்கள் வர ஆபத்தான வழியாகி விடும்,” என்று பேசியுள்ளார்.

காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகன் இது நாள் வரை படம் நல்லாருக்கு, நல்லா இல்லை என்பதை வாய் வழியால் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தான்.

ஆனால், இன்று அவனது கருத்தைப் பலரிடமும் பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்கள் அவனுக்கு வசதியாக உள்ளன.

இதன் மூலம் எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.

விஜய் ஆம்ஸ்ட்ராங், விமர்சனம் எழுதுபவர்களுக்கு சினிமாவைப் பற்றிய புரிதல் வேண்டும் என்கிறார். ஆனால், சினிமாவில் படம் எடுப்பவர்கள் எல்லாருமே ஒளிப்பதிவு நுட்ம், படத் தொகுப்பு நுட்பம், நடிப்புத் திறன் போன்றவற்றில் புரிதல் உள்ளவர்களாகவா இருக்கிறார்கள்.

அது கூடத் தெரியாமல் இன்றும் படம் எடுப்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.

விமர்சனங்களை உங்களை செதுக்கும் உளிகளாக எடுத்துக் கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு, ஐயோ உளி என்னை செதுக்குகிறதே எனக்கு வலிக்குமே என்று சொன்னால்….

ஒளி வீச ஆசைப்படுபவர்கள்  இருட்டிலேயே இருக்க நேரிடும்…

 

Read Previous

காதலும் ‘தொட்டால் தொடரும்’…

Read Next

4வது வாரத்தில் ‘வீரம்’…